Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் வாக்காளர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியுள்ள நிலையில் அசாம், வங்கம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சியை மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது அவர்களது தெளிவான முடிவையே காட்டுகிறது. மக்களின் முன்னுள்ள அரசியல் தெரிவுகளில் அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை எளிதில் விளக்கிவிட முடியாது. அதே நேரத்தில், ஆளுமை மிக்க தலைவர்களைக் கொண்ட கட்சிகளே முன்னிலை பெற்றுவிடுகின்றன.
வங்கத்தில் மம்தா முன்னெடுத்த துணைதேசிய உரையாடல், இந்துத்துவப் பிரச்சாரங்களுக்கான அரசியல் விளைவுகளைக் குறைந்தபட்சம் தற்காலிகமாகத் தடுத்துவைத்திருப்பது புரிகிறது. வங்கத்தில் பாஜக மிகவும் தீவிரமாகப் போராடிய முதல் சட்டமன்றத் தேர்தல் இது. 2016 தேர்தலில் வெறும் 3 இடங்களைப் பெற்ற பாஜக, இப்போது 76 இடங்களை வென்றுள்ளது. அதே நேரத்தில், அம்மாநிலத்திலிருந்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன. பாஜக வெற்றிவாய்ப்பை இழந்திருந்தாலும் அது நடத்திய பெருந்திரளான பிரச்சாரங்களின் தாக்கம் எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணுவதற்கில்லை. மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மம்தாவுக்கு, கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கும் கரோனா ஒரு சவாலாக முன்னிற்கிறது.
கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு பெருவெள்ளங்களையும் பெருந்தொற்றுக் காலத்தையும் மிகச் சிறப்பாக நிர்வகித்த பினராயி விஜயனுக்கு மக்கள் அளித்த பரிசு இது. கட்சியின் மீதான பினராயி விஜயனின் அபரிமிதமான செல்வாக்கும் வருங்காலத்தில் பெருஞ்சிக்கலாக உருவெடுக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT