Published : 26 Jun 2014 10:00 AM
Last Updated : 26 Jun 2014 10:00 AM
சர்க்கரைத் தொழிலை மீட்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்துதல், கரும்பு சாகுபடியாளர்களுக்குச் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாகத் திருப்பிச் செலுத்த ஏதுவாக வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடனாக ரூ.4,400 கோடியை வழங்க அனுமதி அளித்தல், வரும் செப்டம்பர் வரையில் ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரைக்கு ஒரு டன்னுக்கு ரூ.3,300 மானியம் வழங்குதல் என்று சர்க்கரைத் தொழிலுக்கு மத்திய அரசு இனிப்பு தந்திருக்கிறது.
அரசுகள் எப்போதுமே சர்க்கரை ஆலை அதிபர்களின் கோரிக்கைகள்படியே பெரும்பாலும் நடந்துகொள்கின்றன. ஆலை அதிபர்களின் வலுவான அரசியல் பின்னணிதான் இதற்குக் காரணம். சர்க்கரை ஆலைகளின் நலன் கருதியே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்பட்டாலும் இதிலும் சில நன்மைகள் இருக்கின்றன. முதலாவதாக, கரும்பு சாகுபடி யாளர்கள் பணமின்றி அவதிப்படும் இந்த நிலையில் இந்த நிலுவைத் தொகை கிடைத்தால் அவர்களால் அடுத்த சாகுபடியைத் தொய்வின்றித் தொடர உதவியாக இருக்கும்.
உள்நாட்டில் சர்க்கரை உற்பத்திக்கும் தேவைக்கும் எப்போதும் இடைவெளி இருந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால், முடைக்கால கையிருப்பாகக் கைவசம் வைத்திருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமிருந்தால் நிலைமையைச் சமாளித்துவிட முடியும். அத்துடன் இறக்குமதியைத் தாராளமாக அனுமதித்தால் சர்க்கரை விலையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
சர்க்கரை ஆலைகள் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கின்றன என்பதும் சாகுபடியாளர்களுக்கு மொத்தம் 11,000 கோடி ரூபாய் பணம் பாக்கி என்பதும் இப்போதுள்ள நிலவரம். கரும்பு கொள்முதல் விலையை மாநில அரசுகள் அரசியலாக்கிவிட்டதுதான் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர். சர்க்கரை ஆலைகள் தங்களிடமுள்ள சர்க்கரையை யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கொள்ளலாம்.
ஆனால், கரும்பு சாகுபடியாளர்களோ மாநில அரசு நிர்ணயிக்கும் விலைக்கே, அது அடையாளம் காட்டும் ஆலைக்கே விற்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
சர்க்கரைத் தொழில் சிறக்க வேண்டுமென்றால் கட்டுப்பாடுகளே கூடாது என்பது ஆலை உரிமையாளர்களின் கருத்து. ஆனால், சர்க்கரை விலை கட்டுக்கடங்காமல் போகும்போதும், தட்டுப்பாடு ஏற்படும்போதும் அரசியல் பிரச்சினையாகிவிடுவதால் சர்க்கரையை அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. சர்க்கரை என்பது நேரடியாக உண்ணப்படுவதுடன் மதிப்புகூட்டப்பட்ட பொருளாகவும் பல நிலைகளில் பல மதிப்புகளைப் பெறுகிறது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சர்க்கரை உற்பத்தியில் அரசு மேலும் முனைப்பு காட்டுவது அவசியம். கரும்பு சாகுபடிப் பரப்பை ஒருங்கிணைப்பதிலிருந்து இது தொடங்க வேண்டும். இடுபொருள்களையும் மின்சாரத்தையும் தண்ணீரையும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். சாகுபடியாளர்களுக்கு உடனுக்குடன் பணம் கிடைக்க வழிசெய்தால் இந்தத் தொழில் ஏற்றம் பெறும்.
அரசியல்ரீதியான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சுதந்திரமான தொழிலாக இதை வளரவிட்டாலே சர்க்கரை உற்பத்தியில் தன்னிறைவை யும் லாபகரமான நிலையையும் எட்டலாம். புதிய அரசாவது கரும்பு சாகுபடியாளர்கள், நுகர்வோர் ஆகியோரும் இனிப்பில் திளைக்க நடவடிக்கை எடுக்குமா என்று பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT