Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

அதிகரிக்கும் வறுமை நிலை: பெருந்தொற்றின் கொடும் துயரம்

இந்தியாவிலும் சீனாவிலும் 2020-ல் கரோனா பெருந்தொற்றின் விளைவாக வாழ்க்கைத் தரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதைச் சொல்லும் ‘ப்யூ' ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை விடுக்கும் எச்சரிக்கையானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இந்தியாவில் மட்டும் வறுமை நிலைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் புதிதாக 7.5 கோடிப் பேர் வரை சேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு அமெரிக்க டாலருக்கும் குறைவாக (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.145) வருமானம் ஈட்டுபவர்கள் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளனர். சீனாவில் புதிதாக வறுமை நிலைக்கு ஆளாகியிருப்போரின் எண்ணிக்கை ஏறக்குறைய 10 லட்சம் என்ற அளவில் உள்ளது. அங்கும் பொருளாதாரம் மந்த நிலையைச் சந்தித்தாலும், தொடர்ந்து வளர்ச்சி நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் வறுமை நிலைக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாகக் குறைந்து 2019-ல் 7.8 கோடியாக மாறி, தற்போது 13.4 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது 40 லட்சமாக உயர்ந்துள்ளது. அதைப் போலவே, இந்தியாவின் நடுத்தர வர்க்கமும் - அதாவது ஒரு நாளில் 10 முதல் 20 அமெரிக்க டாலர்கள் வரையில் வருமானம் ஈட்டும் (இந்திய மதிப்பில் ரூ.700 முதல் ரூ.1,500 வரை) - 6.6 கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து 3.2 கோடியாகச் சுருங்கியுள்ளது. சீனாவில் பெருந்தொற்றுக்கு முன்பு 50.4 கோடியாக இருந்த நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை தற்போது 49.3 கோடியாகக் குறைந்துள்ளது.

ப்யூ ஆய்வு மையத்தின் இந்த ஆய்வறிக்கையானது, உலக வங்கியினுடைய தரவுகளின் அடிப்படையில் அமைந்ததாகும். மேலும், இந்தியாவிலும் சீனாவிலும் 2011 தொடங்கி 2016 வரையிலான வெவ்வேறு ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் வருமானம், நுகர்வு விவரங்களையும் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, இந்தியா அதன் பக்கத்து நாடான சீனாவைக் காட்டிலும் மிகவும் அதிகமாக வருமான ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாகியிருப்பதையும் தற்போதைய பெருந்தொற்றின் பாதிப்பு இந்த ஏற்றத்தாழ்வுகளை இன்னும் அதிகப்படுத்தியிருப்பதையும் இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. குறைந்த வருமானமுள்ள பிரிவினர் அடுத்தடுத்து வந்த பல்வேறு விதமான பொது முடக்கங்களால் வேலைவாய்ப்புகளையும் வருமானங்களையும் இழந்துள்ளனர். அரசின் நிதிக் கொள்கையும் இந்த இழப்புகளிலிருந்து அவர்களைப் போதிய அளவில் மீட்டெடுக்கவில்லை. நாட்டில் மீண்டும் அதிகரித்துவரும் தொற்று எண்ணிக்கையானது, பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முடக்குவதோடு மட்டுமின்றி, வறுமை நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவந்தவர்களை மறுபடியும் அதை நோக்கித் தள்ளிவிடக்கூடிய அபாயங்கள் நிறைந்தது. எனவே, பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது வாழ்க்கையைக் காப்பாற்றும் நடவடிக்கை மட்டுமல்ல, வாழ்வாதாரங்களையும் காப்பாற்றக்கூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x