Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

ஊரடங்கைத் தடுக்க சுயகட்டுப்பாட்டை ஆயுதமாக்குவோம்

கரோனா விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்காவிட்டால் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த முடியாது என்று எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. கடந்த சில வாரங்களில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கண்டறியப்படும் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்றாலும் அது இரண்டாவது அலையல்ல என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில், இரண்டாவது அலை என்ற அபாயத்தை எப்போது வேண்டுமானாலும் நாம் எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டும்.

தடுப்பூசி, பயன்பாட்டுக்கு வந்துவிட்டாலும்கூட எல்லோருக்கும் அதைப் போடுவதற்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்நிலையில், தொற்று முழுவதுமாக நீங்கிவிட்டதாக மக்கள் நினைப்பதோடு, முகக்கவசம் அணிவதையும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதையும் தவிர்க்க ஆரம்பித்துவிட்டனர். குடும்ப விழாக்களிலும் இறுதிச் சடங்குகளிலும் மக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் துறை தொடர்ந்து எச்சரித்துவந்தாலும் அரசியல் தலைவர்களின் வாக்குச் சேகரிப்பு கூட்டங்கள் அதற்கு விதிவிலக்காக இருக்கின்றன. தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை.

தற்போது கேரளத்திலும் மஹாராஷ்ரடித்திலும் கரோனாவின் உருமாறிய வடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உருவத்தை மாற்றிக்கொண்டபடியே இருக்கும் கரோனா வைரஸின் தொற்றும் வேகம் ஒருவேளை அதிகரித்தால், இரண்டாவது அலை என்பது தவிர்க்க முடியாததாக மாறிவிடும். அப்படியொரு சூழலை நாம் எதிர்கொள்ள நேர்ந்தால், மீண்டும் ஒரு பொதுமுடக்கத்தை நோக்கித் தள்ளப்படுவோம். நாடு தழுவிய பொதுமுடக்கத்துக்கான எண்ணம் எதுவும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கத்கரி குறிப்பிட்டிருந்தாலும் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மஹாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சில நகரங்களிலும் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. நமது பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் ஊரடங்குத் தளர்வுகள் நீக்கப்பட்டுக் கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தொற்று வேகம் அதிகரித்தால் மற்ற மாநிலங்களைப் போல இங்கும் இயல்பு வாழ்க்கை முடங்கக்கூடும். ஊரடங்குக் கட்டுப்பாடுகளால் ஏற்கெனவே மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரம் மேலும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஊரடங்குக் கட்டுப்பாடுகளையும், அதன் காரணமான பொருளாதாரப் பின்விளைவுகளையும் தவிர்ப்பதற்கான ஒரே வழி ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடிச் சுத்தப்படுத்திக்கொள்ளுதல் ஆகிய முன்தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுவது மட்டுமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x