Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM
பிரான்ஸின் பாரிஸைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் ‘நிதி நடவடிக்கைப் பணிக்குழு’ (எஃப்.ஏ.டி.எஃப்.) பாகிஸ்தானைத் தனது ‘சாம்பல் நிறப் பட்டிய’லில் தொடர்ந்து வைத்திருக்கும் முடிவை எடுத்திருப்பது நிச்சயம் அந்நாட்டுக்குப் பின்னடைவையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அந்நியச் செலாவணி முறைகேடுகள், பயங்கரவாதத்துக்குச் செய்யப்படும் நிதியுதவி போன்றவற்றைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. மேற்கண்ட முறைகேடுகளில் ஈடுபடும் நாடுகள் ‘கறுப்புப் பட்டிய’லில் சேர்க்கப்பட்டு, அவற்றுக்குப் பொருளாதாரரீதியில் அழுத்தம் தரப்படும். இந்தப் பட்டியலைவிட சற்றுத் தீவிரம் குறைந்தது ‘சாம்பல் நிறப் பட்டியல்’.
2015-ல் இந்தப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டு 2018-ல் மறுபடியும் சேர்க்கப்பட்டது. 27 நடவடிக்கைகளை அது நிறைவேற்ற வேண்டும் என்றும் பணிக்கப்பட்டது. இந்தப் பணிகளில் இன்னும் மூன்று விஷயங்களில் போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சமீபத்தில் ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் தலைவர் மார்கஸ் ப்ளெயர் தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பவர்களைத் தண்டிப்பதில் தீவிரமும் இருக்க வேண்டும், ஐநா பாதுகாப்பு அவையால் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள லஷ்கர் இ-தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சயீது, ஜேஇஎம் தலைவர் மஸூத் அஸார், பாகிஸ்தானில் உள்ள பிற பயங்கரவாதக் குழுக்களின் தலைவர்கள் போன்றோர் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பவைதான் இன்னும் பூர்த்திசெய்யப்படாத பணிகள். ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் இந்த முடிவை பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். ‘சாம்பல் நிறப் பட்டிய’லில் இருந்த காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு 3,800 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் ஒரு மதிப்பீட்டை மேற்கோள் காட்டியிருக்கிறார். ‘கறுப்புப் பட்டிய’லில் ஈரான், வடகொரியா போன்ற நாடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பாகிஸ்தான் தனது எஞ்சிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே ‘சாம்பல் நிறப் பட்டிய’லிலிருந்து அது நீக்கப்படும். 2021 ஜூனில் ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் உறுப்பினர்கள் கூடும்போது இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் சிறிது இணக்கம் ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும் நேரத்தில் ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பு இப்படியொரு முடிவு எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்பது குறித்தும், பாகிஸ்தான் ராணுவத் தலைமையுடன் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தகவல் தொடர்பில் இருக்கிறார் என்பது குறித்தும் வெளியாகும் செய்திகள் நல்ல சமிக்ஞையே. தற்போது அரசியல்ரீதியிலும், வர்த்தக, கலாச்சாரரீதியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா எந்த உறவும் கொண்டிருக்கவில்லையென்றாலும் கூடிய விரைவில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது.
பயங்கரவாதிகளையும், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் என்று ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்களையும் கடுமையாகத் தண்டிப்பது பாகிஸ்தானுக்கு நல்லது. ‘எஃப்.ஏ.டி.எஃப்’ அமைப்பின் ‘சாம்பல் நிறப் பட்டிய’லிலிருந்து விடுபடுவது என்பது இனி வரும் மாதங்களில் இந்திய-பாகிஸ்தான் உறவு மேம்பட வழிவகுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT