Published : 19 Feb 2021 03:23 AM
Last Updated : 19 Feb 2021 03:23 AM

பொதுத் தேர்வுக்கான அவசர அறிவிப்பு எல்லோரையும் அலைக்கழிக்கும்

ஜனவரியின் பிற்பகுதியில் தொடங்கி ஒருசில பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கும் நிலையில், மே மாதம் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று அனைத்துத் தரப்பினரையுமே அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

கரோனா காலகட்டத்தில் கற்றல் – கற்பித்தல் உலகளாவிய சவால். இணைய வழி வகுப்புகள் ஒரு மாற்றாக முன்வைக்கப்பட்டாலும், அது வெற்றிகரமான நடைமுறையாக மாறவில்லை என்பதே நிதர்சனம். அது அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளியோ, பெரும்பாலான ஆசிரியர்களாலேயே முழுமையாக இந்த வழிமுறையை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லை; மாணவர்களால் இணையம் கொண்டுவரும் கேளிக்கைக் குறுக்கீடுகளைத் தாண்டி பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. உண்மையில் பள்ளிகள் திறக்கப்பட்டது முதலாகவே கற்றல் – கற்பித்தல் முறையாகத் தொடங்கியிருக்கிறது. வழக்கமாக ஒரு முழு ஆண்டுக்கு நடக்கும் இந்தப் பணி இந்த ஆண்டில் அதில் பாதி அளவேனும் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் தேர்வுகள் நடத்தப்படுவதே மாணவர்கள் – ஆசிரியர்கள் இரு தரப்பினருக்கும் குறைந்தபட்ச நியாயமான அவகாசமாக இருக்கும்.

இந்த விஷயத்தில் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நல்ல திட்டமிடலுடன் செயல்பட்டுவருகிறது என்று சொல்ல முடியும். முன்னதாகக் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பாடத்திட்டக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்ட அது, முன்கூட்டியே பள்ளிகளைத் திறந்ததுடன் சில மாதங்களுக்கு முன்னரே தேர்வு கால அட்டவணையையும் வெளியிட்டது. ஜூன் 11 அன்று நிறைவடைவதுபோலத் திட்டமிடப்பட்டிருக்கும் அந்த அட்டவணை மே 4 அன்று தொடங்கினாலும், தேர்வுகளுக்கு இடையிலான இடைவெளி உள்பட எல்லா அம்சங்களிலும் போதிய அவகாசத்தை உள்ளடக்கி இருக்கிறது. மாறாக, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நேர் எதிர்ப் போக்கில் செயல்படுகிறது. பள்ளிகள் திறப்பு தொடங்கி, பாடத்திட்டக் குறைப்பு வரையில் எதிலும் தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுக்காத அது, மே 3 - மே 21 பதினெட்டு நாட்களில் அனைத்துத் தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறது. இதில் கூடுதலாக உள்ள சிக்கல் என்னவென்றால், இதே காலகட்டத்தில்தான் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்பார்த்திருக்கிறது; தேர்தல் பணிகளிலும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதாகும்.

பள்ளிக்கல்வித் துறை இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே பொது முடக்கத்தையொட்டி இடைநிற்றல்கள் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ள நிலையில், அரசின் அதிவேகத் தேர்வு அறிவிப்பானது பெரும் தொகையினரைத் தேர்வுத் தோல்விக்குள் தள்ளுவதோடு, நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வுப் போட்டியை எதிர்கொள்ளும் மாணாக்கர்களின் உயர் கல்விக் கனவுகளை நிர்மூலமாக்கிவிடக் கூடும். குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கேனும் தேர்வுகளைத் தள்ளிப்போட்டு, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டு ஜூன் மாத இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிப்பது என்ற முடிவை எடுப்பதே எல்லோருக்கும் உகந்ததாக அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x