Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்: அலட்சியமே காரணம்!

விருதுநகரில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் துயரகரமான சம்பவம் என்று வெறுமனே கடந்துவிட முடியாது. இந்த விபத்தில் 20 பேர் இறந்துள்ளனர். 28 ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். தமிழ்நாட்டின் பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இன்னும் பாதுகாப்பற்ற சூழலில்தான் பணிபுரிந்துகொண்டிருக்கின்றனர் என்பதையே இந்த விபத்து நமக்கு உணர்த்துகிறது.

கடந்த 11 மாதங்களில் வேறு மூன்று பட்டாசு ஆலைகளில் நடந்த பெரும் விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு காவல் துறைத் தரவுகளின்படி 2011-லிருந்து 2020 வரை தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் நடைபெற்ற 142 விபத்துகளில் கிட்டத்தட்ட 240 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், 265-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். தொடர் அலட்சியத்தையும் விதிமீறல்களையுமே இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

வழக்குப் பதிவு, கைது நடவடிக்கைகள், காரணங்களைக் கண்டறிதல், அடையாளமாக நடத்தப்படும் ஆய்வுகள், எச்சரிக்கை அறிவிப்புகள், பாதுகாப்பு அறிவுரைகள் என்று குறுகிய கால நடவடிக்கைகள் மட்டுமே கள எதார்த்தமாக இருக்கிறது. உரிமம் பெறாமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் சிவகாசிக்கு வெளியில் பல்கிப் பெருகியுள்ளன. பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் பெற்றவர்கள் சட்ட விரோதமான முறையில் உள்குத்தகை ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதும் பெரிய அளவில் நடந்துவருகிறது. அபாயகரமான தொழில் துறைகளில் இவ்வாறு பணிகளை உள்குத்தகைக்கு விடுவதே பாதுகாப்பு விதிமுறைகளைத் தவிர்ப்பதற்காகத்தான். எனவே, பட்டாசு தயாரிக்கும் ஒவ்வொரு அலகும் தொழிற்சாலையைப் போலவே இயங்குகிறது. எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனப் பொருட்கள் அங்கு இருப்பு வைக்கப்படுகின்றன. மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு, ஒவ்வொரு கட்டிடத்திலும் கூட்டம் சேர்ந்துவிடுகிறது.

பயிற்சி பெறாத ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதாலும் செய்யும் பட்டாசுகளின் எண்ணிக்கைக்குத் தகுந்த ஊதியம் வழங்குவதும் ஒவ்வொரு ஊழியரையும் ஒரு நாளைக்கு அதிக பட்டாசுகளைச் செய்யத் தூண்டுகிறது. சமீபத்திய விபத்தில்கூட முழுமையாகச் செய்து முடிக்கப்படாத பட்டாசுகள்தான் விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. அபாயகரமான உற்பத்திப் பணிகளை இயந்திரங்களைக் கொண்டு செய்ய வேண்டும் என்று பத்தாண்டுகளுக்கு முன்பே நாடாளுமன்றம் கூறியிருந்தாலும்கூட, பட்டாசுத் தொழிலானது மனித உழைப்பைக் கொண்டு நடைபெறும் தொழிலாகத்தான் இன்றும் தொடர்கிறது.

தொழிற்சாலைகளில் காலவாரியாகச் சோதனைகள் நடத்தி, தவறுகள் கண்டறியப்பட்டு விதிமுறைகளை மீறுபவர்களின் மீது கடுமையான தண்டனைகள் அளிப்பதில் எந்தச் சமரசமும் கூடாது. பட்டாசுத் தொழில் துறையானது பன்மடங்கு வளர்ச்சியடைந்துவரும் நிலையில், விதிமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணிக்க வேண்டிய அமைப்புகளுக்கு ஒன்றிய - மாநில அரசுகள் தேவையான அளவில் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இத்தொழில் துறையில் தொழிலாளர் சீர்திருத்தங்களையும் தொழில்நுட்பப் புதுமைகளையும் புகுத்துவதற்கான நிலையான அரசியல் அழுத்தங்களும் மிகவும் அவசியமானது. அனைத்துக்கும் மேலாக, பட்டாசுகள் உயிருக்குப் பாதுகாப்பில்லாத அபாயகரமான சூழலில்தான் இன்னும் தயாரிக்கப்படும் என்றால், விழாக் காலங்களில் பட்டாசுகளைப் பயன்படுத்துவதில் எந்த மகிழ்ச்சியும் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x