Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM
பொது முடக்கத்தையொட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்பட்ட நூலகங்கள் இன்னும் பகுதி நேர அளவில்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மாவட்ட மைய நூலகங்களும் கிளை நூலகங்களும் கடந்த செப்டம்பர் 1-லிருந்து மதியம் இரண்டு மணி வரையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டன. எனினும், அந்த அனுமதியானது நூல் இரவல் அளிக்கும் பிரிவு, குறிப்புதவி நூல்கள் பிரிவு ஆகியவை இயங்குவதற்கு மட்டுமே. நாளிதழ்கள், பத்திரிகைகள் பிரிவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. செப்டம்பர் மாதத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக இந்நிலையே இன்றும் நீடித்துவருகிறது. பள்ளி, கல்லூரிகள் இயங்குவதற்குத் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக அரசு, நூலகங்களும் முழு நேரமும் இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
நூல் இரவல் கொடுக்கும் பிரிவுகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என்பதால், பொதுவாக நூலகத்தின் உறுப்பினர்கள் தவிர, வேறு யாரும் அங்கு செல்ல முடியவில்லை. இரவல் பெறும் பிரிவிலும் உறுப்பினர்கள் புத்தக அலமாரிகளில் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை எடுக்க அனுமதிக்கப்படவில்லை. நோய்த் தொற்றுக் காலத்தில் அது மிகவும் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். ஆனால், அனைத்து நூலகங்களிலுமே புத்தகங்கள் வகைப்படுத்தி அடுக்கிவைக்கப்படவில்லை என்பதும் நூலகப் புத்தகங்கள் பற்றிய விவரங்கள் கணினிகளில் முழுமையாகப் பதிவுசெய்யப்படவில்லை என்பதும் வாசகர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கவோ, அவர்கள் கேட்கும் புத்தகங்களை நூலகர்கள் உடனடியாகத் தேடிக் கொடுக்கவோ வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கிவிட்டது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பொறுத்தவரை, வாசகர்கள் தங்களது சொந்தப் புத்தகங்கள், மடிக்கணினி ஆகியவற்றை எடுத்துச்சென்று படிப்பதற்கான இடவசதிகளும் அங்கு அமைந்திருக்கின்றன என்பது அதன் சிறப்பம்சங்களில் ஒன்று. சென்னையில் தங்கிப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது அரிய வாய்ப்பாக அமைந்திருந்தது. ஆனால், மதியம் 2 மணி வரை மட்டுமே நூலகங்களில் வாசகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதால் மாணவர்கள் மாலை நேரங்களில் அருகே உள்ள மரத்தடிகளில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மாவட்ட மைய நூலகங்களைச் சார்ந்திருக்கும் போட்டித் தேர்வு மாணவர்களும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் இந்த ஆண்டு நடத்தவிருக்கும் தேர்வுகளைப் பற்றிய விவரங்களை அறிவித்துவிட்டது. போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்ள நூலகங்களை மட்டுமே நம்பியிருக்கும் மாணவர்களுக்கு இன்னும் முழு நேரமாக அவை இயங்க அனுமதிக்கப்படாதது மனதளவில் அவர்களைப் பலவீனப்படுத்திவருகிறது.
பத்திரிகைகள், நாளிதழ் பிரிவு பத்து மாதங்களுக்கும் மேலாக நூலகங்களில் இயங்கவில்லை என்பது அனைத்து வாசகர்களுக்குமே வருத்தத்தை அளித்துவருகிறது. கடந்த மார்ச் மாதம் முதலாக நூலகங்களுக்காகப் பத்திரிகைகள் வாங்குவது முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வசிக்கும் நகர்ப்புறங்கள் என்றாலுமேகூட அங்குள்ள நூலகங்களுக்கு வழக்கமாகச் செல்லும் வாசகர்கள் மிகச் சில ஆயிரங்களில்தான் இருப்பார்கள். நோய்த் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கையோடும் வழிகாட்டுதல்களோடும் அவர்களை நூலகங்களில் அனுமதிப்பதற்கு இனிமேலும் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. பள்ளிக்கூடங்களைப் போலவே நூலகங்களும் முழு நேரமும் இயங்கட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT