Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM

சமரசத்தை நோக்கி நகரட்டும் அமெரிக்காவும் ஈரானும்!

ஒபாமாவின் துணை அதிபராக ஜோ பைடன் எட்டு ஆண்டுகள் பணியாற்றி, 2017-ல் அவரது பணிக் காலம் முடிவடைந்தபோது அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இருந்த உறவானது தற்போது நேர்மாறான திசையில் போய்க்கொண்டிருக்கிறது. 2015-ல் அமெரிக்காவும், சர்வதேச அளவில் சக்திவாய்ந்த பிற நாடுகளும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரண்டு நாடுகளுமே இராக்கில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராகக் கூட்டுசேர்ந்து போரிட்டன. பிறகு, ட்ரம்ப் வந்தார். அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டது; ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா மறுபடியும் விதித்தது. ஜனவரி 20-ல் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் ஆகவிருக்கிறார். வெளியுறவுரீதியில் அவர் சந்திக்கவிருக்கும் உடனடியான சவால்களுள் ஒன்றாக ஈரான் இருக்கும். அமெரிக்கா மீண்டும் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைந்துகொள்ளும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது பைடன் கூறினார். அதை பைடன் மேற்கொள்வார் எனில், மேற்காசியாவில் அமெரிக்காவின் கூட்டாளிகளிடமிருந்து, குறிப்பாக இஸ்ரேலிடமிருந்து அமெரிக்கா பலத்த எதிர்ப்பைச் சந்திக்கும்.

சமீபத்தில், ஈரானின் அணு இயற்பியலாளர் மஹ்ஸன் ஃபக்ரிஸாடே படுகொலை செய்யப்பட்டிருப்பது அந்தப் பிராந்தியத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றஞ்சாட்டியிருக்கிறது; கூடவே, பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் சூளுரைத்திருக்கிறது. அப்படி ஈரான் ஏதும் நடவடிக்கைகள் எடுக்கும் என்றால், மேலும் பதற்றம் அதிகரிக்கும். இது போருக்குக்கூட வழிவகுத்துவிடும். இதன் காரணமாக, பைடன் நிர்வாகத்தின் ராஜதந்திரத் தெரிவுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படலாம்.

தேர்தல் முடிந்த பிறகும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தனது வாக்குறுதியில் எந்த மாற்றமும் இல்லை என்றே பைடன் கூறினார். அதே நேரத்தில், ஈரான் மீதான கட்டுப்பாடுகளை நீட்டிக்க முயல்வேன் என்றும், மேற்காசியாவில் ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாதச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்போவதாகவும் கூறியுள்ளார். தானாகவே அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் விலகிக்கொண்டதுபோல் பைடனும் ஆரம்பத்தில் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பலாம். அந்த ஒப்பந்தம் குறித்துத் தன்னுடன் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று ட்ரம்ப் எதிர்பார்த்தார். ஈரான் அதற்கு அடிபணியவில்லை. ஈரானுக்கு ட்ரம்ப் நிர்வாகம் அதிகபட்ச அழுத்தம் கொடுத்தபோதும் ஈரான் அதற்கு வளைந்துகொடுக்கவில்லை.

2019-ல் வளைகுடா மீது பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியபோதும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானிய ஜெனரல் காஸீம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்தபோதும் என இரண்டு முறை போர் வெடிப்பதற்கான ஆபத்து ஏற்பட்டது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்தப் பிராந்தியத்தில் கொஞ்சமாவது அமைதியை நிலைநாட்டக் கூடிய அணுசக்தி ஒப்பந்தத்துக்குப் புத்துயிர் கொடுப்பது அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை தரக் கூடியது. இதை ஜோ பைடன் உறுதிப்படுத்த வேண்டும். ஈரானும் தன் பங்குக்குப் பொறுமையைக் கடைப்பிடித்து சமரசத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x