Published : 08 Dec 2020 03:13 AM
Last Updated : 08 Dec 2020 03:13 AM

பள்ளிகள் திறப்பதற்குத் தயாராகிவிட்டோமா?

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துவருவதால் பள்ளிகளைத் திறப்பது குறித்த நம்பிக்கையானது கல்வித் துறையினரிடம் அதிகரித்துவருகிறது. கூடவே, இணையவழித் தேர்வுகளுக்குப் பதிலாக வழக்கமான எழுத்துத் தேர்வு முறையையே 2021-ல் பின்பற்றும் முடிவிலும் கல்வித் துறை இருப்பதாகத் தெரிகிறது. இது நல்ல விஷயம். ஏனெனில், கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களில் 50%-க்கு மேற்பட்டோரிடம் திறன்பேசி, இணைய வசதி இல்லாத நிலையில், எழுத்துத் தேர்வே எல்லோருக்கும் சமவாய்ப்பைத் தருவதாக அமையும். சிபிஎஸ்இ அமைப்பானது, உயர்நிலைக் கல்வி அளவில் தனக்குக் கீழே 20 ஆயிரம் பள்ளிகளுக்கும் மேல் கொண்டிருக்கிறது. பெருந்தொற்றின் தீவிரம் தணிந்துவிடும் என்ற நம்பிக்கையில் அது எழுத்துத் தேர்வு முறைக்கு ஆதரவாகவே இருக்கிறது.

மேல்நிலைப் பள்ளித் தேர்வு எழுதும் 12 லட்சம் மாணவர்களைக் கொண்ட அமைப்பாக சிபிஎஸ்இ இருக்கிறது. கல்விக்கான கால அட்டவணையைப் பொறுத்தவரை அந்த அமைப்பே வழிகாட்டியாகவும் இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, பொதுமுடக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே 2020 தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி முடித்துவிட்டது. மாநிலத் தேர்வு வாரியங்கள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்வுகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. கரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரமும் குஜராத்தும் ஆண்டுத் தேர்வுகளைத் தள்ளிப்போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றன. இழக்கப்பட்ட கல்விச் செயல்பாடுகளைக் கருத்தில்கொண்டு ‘இந்திய பள்ளிக்கல்விச் சான்றிதழ் தேர்வுகள் குழு’ 10, 12-ம் வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகளை ஜனவரியில் திறக்கும்படி மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை உலகம் முழுவதும் நீடிக்கும் பிரச்சினைகள் இந்தியாவிலும் பிரதிபலிக்கின்றன என்பதையே இவையெல்லாம் காட்டுகின்றன. கூடுதலாக, தமிழ்நாடு, வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் வரும் ஆண்டு, தேர்வுகளும் சட்டமன்றத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் வரவிருக்கும் சிக்கலும் இருக்கிறது.

பிரிட்டன் போன்ற நாடுகளில் செய்யப்பட்டிருப்பதுபோல் இந்தியாவிலும் பாடங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டிருப்பதும், தேர்வுகள் மார்ச் மாதத்திலிருந்து சில மாதங்கள் தள்ளி நடத்தப்படும் சாத்தியம் உருவாகியிருப்பதும் மாணவர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது. சீரான இடைவெளியில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் போடக் கூடிய அளவில் ஒரு தடுப்பூசித் திட்டம் உருவாக்கப்படுவது வரும் ஆண்டில் கல்விச் செயல்பாடுகள் தடையற்று நடைபெறுவதற்கு அவசியமாக இருக்கும். இதுபோன்ற விஷயங்களில் இணையம் வழியாகப் பொதுமக்களிடம் கருத்துகள் பெறப்படும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருப்பது கருத்தொற்றுமையை நோக்கிய ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும்.

அமெரிக்கா, ஐரோப்பாவின் தட்பவெப்பத்தைவிட இந்தியாவின் தட்பவெப்பமானது பெருந்தொற்றுப் பரவலுக்குக் குறைந்த அளவே சாதகமாக இருப்பதால், காற்றோட்டமுள்ள வகுப்பறைகளை இந்தியாவால் வழங்க முடியும். எனினும், அடுத்த சில மாதங்களில் பெருந்தொற்றின் போக்கு எப்படி இருக்கும் என்பதன் அடிப்படையில்தான் 2021-க்கான பள்ளிக்கல்வி அட்டவணை பற்றிய தெளிவான பார்வை உருவாகும். தடுப்பு மருந்து கிடைக்க ஆரம்பித்தாலும் பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் சரிவரப் பின்பற்றும்படி முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x