Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

பாடத்திட்டக் குறைப்பு பயனளிக்க வேண்டும்

மத்திய பிரதேச அரசு, மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 30% பாடங்களைக் குறைத்துள்ளதாகவும், குறைக்கப்பட்ட பாட விவரங்களை விரைவில் வெளியிடுவதாகவும் சமீபத்தில் அறிவித்துள்ளது. ராஜஸ்தான் அரசு, அக்டோபர் மத்தியில் மாநிலப் பாடத் திட்டத்தில் 9 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு 40% பாடத்திட்டத்தைக் குறைத்ததோடு, திருத்தப்பட்ட பாடத்திட்டத்தையும் அப்போதே வெளியிட்டுவிட்டது. தமிழக அரசு மே மாதத்திலேயே 18 பேர் அடங்கிய வல்லுநர் குழுவை அமைத்து, அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பரில் மாநிலப் பாடத்திட்டத்தில் 40% குறைக்கப்படுவதாக அறிவித்தது. பெருந்தொற்றின் காரணமாகப் பள்ளிகளைத் திறக்க முடியாதிருக்கும் சூழலில் தமிழக அரசு காலத்தே எடுத்த இந்த முடிவு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நடப்புக் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% குறைக்கப்படுவதாகவும் அது குறித்த விவரங்களும் ஜூலையில் அறிவிக்கப்பட்டது. பாடத்திட்டக் குறைப்பு இன்னும் அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், இறுதித் தேர்வுகள் தள்ளிவைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய அளவிலான சிபிஎஸ்இ பாடத்திட்டக் குறைப்பிலேயே உறுதியாக முடிவெடுக்க முடியாத நிலையில், தமிழக அரசு முன்கூட்டியே ஒரு தெளிவான ஒரு முடிவை எடுத்து அறிவித்தது பாராட்டத்தக்கது. அதே நேரத்தில், 40% பாடத்திட்டக் குறைப்பு என்பது பாடங்களைக் குறைப்பதாக இல்லாமல் ஒவ்வொரு பாடத்திலும் வினாக்கள், கூடுதல் விவரங்கள் ஆகியவற்றைக் குறைப்பதாகவே திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே, குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் வெளியாவதில் காலதாமதமாகிவருகிறது.

வழக்கமான கல்வியாண்டு முறையில், ஜூன் தொடங்கி நவம்பருக்குள்ளேயே அனைத்துப் பாடங்களும் நடத்தப்பட்டுவிடும். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பொதுவாகத் திருப்புத் தேர்வுகளும் ஆய்வகச் சோதனைத் தேர்வுகளுமே நடைபெறும். இந்த ஆண்டு நோய்ப் பரவல் அச்சம், பள்ளிக்கூடங்களின் இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களில் பெரும் பகுதியினர் பொருளாதார அளவில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களாக இருப்பதால் கணினி, திறன்பேசி, இணையத் தொடர்புகள் ஆகியவை இல்லாமல் கற்றல் சங்கிலி அறுபட்டுள்ளது. தனியார்ப் பள்ளிகளிலும் இணைய வழி வகுப்புகள் மாணவர்களால் எந்த அளவுக்குக் கிரகிக்கப்பட்டிருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘கல்வித் தொலைக்காட்சி’யும், அந்த நிகழ்ச்சிகள் இணையதளத்தில் பார்க்கக் கிடைப்பதும் கற்றலின் வெளியை விரிவுபடுத்தியிருக்கிறது. எனினும், 12-ம் வகுப்பில், நீட் தேர்வுக்குத் தயாராகும் 50,000 மாணவர்களுக்காக எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடச்சுமையின் அழுத்தத்தை இப்போதும் அனுபவிக்கிறார்கள். நவம்பர் 28-ல் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இது குறித்த அறிக்கையை நவம்பர் 30 அன்று முதல்வரிடம் வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார். குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டால்தான் மாணவர்களுக்கு அதன் முழுப்பயன் கிடைக்கும். பொறியியல், அறிவியல் உள்ளிட்ட இதர துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் பள்ளி இறுதித் தேர்வுக்கு இப்போதே தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x