Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
காவிரிப் படுகையில் நேரடி நெல் கொள்முதலில் விவசாயிகள் தொடர்ந்து விதவிதமான பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். முக்கியமாக, விரயத்தைத் தவிர்க்க தீவிரமான முன்னேற்பாடுகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
கொள்முதலுக்காகப் பதிவுசெய்து வாரக்கணக்கில் காத்திருக்க நேரும்போது வெயிலுக்கும் மழைக்கும் அஞ்ச வேண்டிய நிலையிலேயே விவசாயிகள் இருக்க வேண்டியிருக்கிறது. கொள்முதல் நிலையங்களில் வெட்டவெளியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல், வெயில் காய்கையில் ஈரப்பதம் குறைந்து எடை குறைகிறது என்றால், எதிர்பாராத மழை பெய்கையில் நெல்லைப் பாதுகாப்பதற்குப் போதிய தார்ப்பாய் வசதிகள்கூட அங்கு இருப்பதில்லை. ஆக, வெயிலோ மழையோ இழப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டியிருக்கிறது.
கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதற்கு மட்டுமே அனுமதிப்பதும் விவசாயிகள் வாரக்கணக்கில் காத்துக்கிடப்பதற்கு ஒரு காரணம். கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ அளவுள்ள சணல் சாக்குகளே பயன்படுத்தப்படுகின்றன என்பதால், ஒவ்வொரு நிலையத்திலும் நாளொன்றுக்கு 40 டன்கள் மட்டுமே அதிகபட்ச கொள்முதல் அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் மாவட்ட ஆட்சியரே கொள்முதல் நிலையங்களைத் திறந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும்கூட, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தொடர்ந்து காத்திருக்கவே நேர்கிறது. தற்காலிக அடிப்படையில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்கியோ அல்லது தினசரி கொள்முதலின் அளவை உயர்த்தியோ இந்தப் பிரச்சினையை மிகவும் எளிதாகச் சரிசெய்துவிட முடியும். மேலும், கொள்முதல் காலங்களில் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களும் சுமை தூக்கும் ஊழியர்களும் எதிர்கொள்ளும் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் அந்தந்தப் பகுதிகளிலிருந்து தற்காலிகப் பணியாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம்.
கொள்முதலுக்காக நிலையங்களில் அளிக்கப்படும் சணல் சாக்குகளின் தரம் நாளுக்கு நாள் கீழே இறங்கிக்கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு நூற்றுக்குப் பத்து சாக்குகள் நெல் பிடிக்கும்போதே கிழிந்துபோகும் நிலையில்தான் இருந்தன என்று விவசாயிகள் கூறுகிறார்கள். ஊழலைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? இந்த லட்சணத்தில் வழங்கப்படும் சாக்குகளில் நெல் அடைக்கப்பட்டு பின்னர் லாரிகளில் ஏற்றப்படும்போதும், இறக்கப்படும்போதும், இருப்பு வைக்கப்படும் கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லப்படும்போதும், ஆலைகளுக்குக் கொண்டுசெல்லப்படும்போதும் எவ்வளவு நெல் சேதாரமாகும் என்று விளக்க வேண்டியது இல்லை. அதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனடியாகக் கொள்முதல் நிலையங்களிலிருந்து கிடங்குகளுக்கு எடுத்துச்செல்லும் வகையில் லாரிகளின் எண்ணிக்கையிலும் தட்டுப்பாடு நிலவுவதால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெயிலிலும் மழையிலும் கிடந்து நிலையங்களிலேயே வீணாவதும் தொடரவே செய்கிறது. நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக இப்படி விரயமாகும் நெல்லை ஈடுகட்ட ஈரப்பதத்தின் பெயராலும், விரயத்தின் பெயராலும் விலையில்லாமல் ‘மூட்டைக்கு ஒரு கிலோ’ விவசாயிகள் தரப்பிலிருந்து வாங்கப்படுகிறது. நூறு மூட்டை நெல் போடும் விவசாயியிடமிருந்து இரண்டரை மூட்டை நெல் இப்படி வாங்கப்பட்டால், மொத்தம் எவ்வளவு பெறப்படும், மொத்தமாக எவ்வளவு இழப்பை விவசாயிகள் சந்திப்பார்கள்?
உணவு தானியங்களை விளைவிக்கும் விவசாயிகளின் தலையில் இந்தச் சேதங்கள் கட்டப்படும் அவலத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தானியங்களை இழப்பது ஒட்டுமொத்த சமூக இழப்பு. அதுவும் கோடிக்கணக்கானோர் பசியால் வாடும் ஒரு நாட்டில், அது ஒரு சமூகக் குற்றமும்கூட என்ற உணர்வு சம்பந்தப்பட்டோருக்கு வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT