Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கிட வகைசெய்யும் சட்டத்தை இயற்றி, அதை அரசாணையின் வழியாக நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியதாகும். அதேசமயம், தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின்படி மேல்நிலைக் கல்வியை முடிக்கும் 9 லட்சம் மாணவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கினர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதால், இந்த ஒதுக்கீட்டை 33% ஆக உயர்த்த வேண்டும் என்று முன்னதாக ‘இந்து தமிழ்’ முன்மொழிந்தது நம் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.
பொதுப் பள்ளிகளிலிருந்து வெளியே வரும் மாணவர்களின் விகிதத்துக்கும், நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கியமான பதவிகளில் இடம்பெறுவோரின் விகிதத்துக்கும் உள்ள தொடர்பை ஒப்பிடுவதும், அதற்கேற்ப கொள்கை முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதும் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்ட ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகளில் ஒன்று. அந்த வகையில், இந்த ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்பட வேண்டும். அடுத்ததாக, இந்த ஒதுக்கீடானது அரசுப் பள்ளிகள் மட்டும் அல்லாது அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களுக்குமானதாக விஸ்தரிக்கப்பட வேண்டும்.
உள் இடஒதுக்கீட்டின் பயனாக நடப்பு ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய அரசுப் பள்ளி மாணவர்கள் 300 பேர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தமிழ்நாடு அரசுசார் பள்ளிகளில் 6 -12 வகுப்புகளைப் படித்த மாணவர்களும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009-ன் கீழ் தனியார் பள்ளிகளில் 6 – 8 பயின்று, பின்னர் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இந்த ஒதுக்கீடு பொருந்தும் வகையில் இப்போதைய ஏற்பாடு இருக்கிறது. இந்தப் பட்டியலில் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்களும் இடம்பெறும்போதே இந்தச் சட்டத்தின் நோக்கம் முழுமை பெறும்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த அரசுப் பள்ளிகள் 37,431. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகள் 3,054. அரசு உதவிபெறும் பள்ளிகளின் எண்ணிக்கை 3,054. அவற்றில் மேல்நிலைப் பள்ளிகள் 1,218. அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அவற்றில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளிலேயே படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளைப் போலவே, இப்பள்ளிகளிலும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் பெரும்பான்மையாகப் படிக்கிறார்கள். இதனாலேயே 1973 அரசு உதவிபெறும் பள்ளிகள் சட்டத்திலும், தொடர்ந்து வெளியிடப்பட்ட விதிமுறைகளிலும் அரசுப் பள்ளிகளுக்கான நடைமுறைகள் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுவந்தன. அரசு அளிக்கும் மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், உதவித்தொகை என அத்தனை சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்பட்டுவருகின்றன. பள்ளிக் கல்வித் துறை நடத்திவரும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும்கூட இரு பள்ளிகளுக்கும் பொதுவாகவே நடத்தப்படுகின்றன. இப்படியான சூழலில் மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் மட்டும் அரசு உதவிபெறும் பள்ளிகள் சேர்க்கப்படாததில் எந்த நியாயமும் இல்லை. அரசு இவ்விஷயத்தைப் பரிவோடும் கவனத்தோடும் அணுக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT