Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
கரோனா பெருந்தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் இக்காலத்தில் கிராமப்புற மாணவர்களின் நிலைதான் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே கற்றலுக்கான உதவிகளும் சாதனங்களும் கிடைக்கின்றன. நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைப்பதுபோல் குடும்பத்தினரின் ஆதரவும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ‘கல்வியின் நிலை குறித்த ஆண்டறிக்கை - 2020’ (அஸர் 2020) இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கை வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகளை ஆய்ந்து இந்த நிலையைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளை அரசு கண்டறிய வேண்டும். கூடவே, பள்ளிகளை எப்போது திறந்தால் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் முடிவுசெய்ய வேண்டும். இதற்கிடையே மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கற்பதற்கு எப்படி வழிவகை செய்யலாம் என்று பள்ளிகளுடன் இணைந்து அரசு திட்டமிட வேண்டும்.
அஸர் 2020 கருத்துக் கணிப்பு 26 மாநிலங்களையும் நான்கு ஒன்றியப் பிரதேசங்களையும் உள்ளடக்கியது; இது சில முக்கியமான விஷயங்களை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறது. மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடம்பெயர்வது 2018-ஐவிட 5% அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை கூறுகிறது. வகுப்பறைகளில் பாடம் சொல்லித்தருவது மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தப்பட்டிருப்பதால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. படிப்பை நிறுத்திவிடுவதாலோ, பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் அவற்றில் சேர்க்க முடியாததாலோ இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. டிஜிட்டல் பயன்பாடுகளைப் பொறுத்தவரை பெரும் பாகுபாடு காணப்படுகிறது. அரசுப் பள்ளியில் படிப்பவர்களில் 43.6% மாணவர்களிடம் திறன்பேசி (ஸ்மார்ட்) இல்லை; வீட்டுப் பாடம் உள்ளிட்ட பயிற்சிகளைப் பள்ளிகளிலிருந்து பெறும் மாணவர்களில் 67.3% பேர் அவற்றை வாட்ஸ்அப் மூலமே பெறுகின்றனர் என்பது கற்றலில் திறன்பேசி உள்ளிட்ட சாதனங்கள், இணைய இணைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும். பாதியளவு மாணவர்களுக்கே வீட்டில் உதவி கிடைக்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கல்வித் துறை சில முடிவுகளை எடுப்பதற்கு உதவி புரியும் வகையில் அஸர் அறிக்கையின் தரவுகள் அமைந்துள்ளன. பகுதியளவு பள்ளித் திறப்பையும் இணைய வழிக் கல்வியையும் ஒன்றாக்கி, ஒரு கல்வி முறையை அறிமுகப்படுத்துவதைப் பற்றிக் கல்வித் துறை யோசிக்கலாம். இன்னும் பள்ளியில் சேராதவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் கிடைப்பதற்கு வழிசெய்தால் வீட்டிலுள்ளவர்கள்கூட மாணவர்களுக்குச் சொல்லித்தருவதற்கு ஏதுவாக இருக்கும். திறன்பேசி இல்லாத ஏழை மாணவர்களுக்குத் திறன்பேசிகள் கிடைப்பதற்கு அரசு உதவிசெய்யலாம். இடவசதி அதிகம் உள்ள கிராமப்புறங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வெளியேயும் கற்பித்தலைப் பாதுகாப்பாக விரிவுபடுத்தலாம். திறமை மிக்க ஆசிரியர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் காணொளிகள் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உதவிபுரிந்திருக்கின்றன. இவை பெருந்தொற்றுக் காலத்தைத் தாண்டியும் உதவிகரமாக இருக்கும். தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்கள் தொலைக்காட்சி மூலமாகவும் இணையம் மூலமாகவும் பாடத்திட்டம் அடிப்படையிலான பாடங்களை ஒளிபரப்பி நாட்டுக்கே முன்னோடிகளாகத் திகழ்கின்றன. பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காகப் பள்ளி அனுப்புவதற்குத் தயாராக இல்லாத சூழலில், பெருந்தொற்று இன்னும் நீங்காத சூழலில் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு அரசு புதுமையான வழிமுறைகளைக் கண்டறிவது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT