Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

பொதுத் திட்டங்களுக்கு பாதுகாப்புத் துறையின் நிலம்: வரவேற்கத்தக்க முடிவு!

பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலங்களைப் பொதுத் திட்டங்களுக்காகக் கையகப்படுத்துவதை எளிதாக்கும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்க ஒன்று. நகர்ப்புறங்களில் பாதுகாப்புத் துறை மிக அதிகமான நிலங்களைத் தனது கைவசம் வைத்திருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசு தற்போது எடுத்திருக்கும் முடிவு, நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் உள்கட்டமைப்புப் பணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், பாதுகாப்புத் துறைக்கும் இது உதவியாக இருக்கும். ராணுவத்துக்குச் சொந்தமான பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுவடையும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடும் கிடைக்கும்.

நகரங்களின் மையப்பகுதிகளில் இருந்தாலுமேகூட ராணுவத்துக்குச் சொந்தமான நிலங்கள் தனித் தீவுகளாகவே இருந்துவருகின்றன. அவற்றில் ‘கன்டோன்மென்ட்’ எனப்படும் ராணுவக் குடியிருப்புப் பகுதிகளும் உள்ளடக்கம். இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் 17.95 லட்சம் ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளன. அவற்றில் 16.35 லட்சம் ஏக்கர் நிலங்கள் 62 குடியிருப்புப் பகுதிகளையொட்டி அமைந்துள்ளன. நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பிலிருந்தபோது இந்த ராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளைப் பொதுப் போக்குவரத்துக்காகத் திறந்துவிட்டார். அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும்போதுகூட ராணுவக் குடியிருப்புப் பகுதிகளின் வழியாகச் செல்ல முடியவில்லை, அந்நிலை மாறிவிட்டது என்று தங்களது மகிழ்ச்சியை மக்கள் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாகத் தற்போதைய முடிவையும் பார்க்க முடியும். மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலானது அடுத்தடுத்து மேற்கொள்ளப்படவிருக்கும் பாதுகாப்புத் துறையின் நிலச் சீர்திருத்தங்களுக்கு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இன்னொரு பக்கம், ராணுவக் குடியிருப்புப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்த தனிச் சட்டத்துக்கான முன்வடிவும் தயாராகிவிட்டது. இதற்கு முன்பு சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ, ரயில் பாதைகள் ஆகிய திட்டங்களுக்காக மட்டுமே அதுவும் சம மதிப்பு கொண்ட நிலங்களைப் பதிலாகப் பெற்றுக்கொண்டோ அல்லது சந்தை மதிப்பின்படி அதற்குரிய விலையைப் பெற்றுக்கொண்டோதான் ராணுவத் துறைக்குரிய நிலங்கள் பொதுத் திட்டங்களுக்குக் கையகப்படுத்தப்பட்டன. நிலத்துக்கு மாற்றாக அதே மதிப்பு கொண்ட நிலத்தைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ளும் நடைமுறைகள் எளிதாக இல்லை. அதேநேரத்தில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் செலுத்தப்பட்ட விலையும் ஒன்றிய அரசின் தொகுப்பு நிதியில் சேர்க்கப்பட்டதேயொழிய, ராணுவத் துறையின் கணக்கில் நேரடியாகச் சென்றுசேரவில்லை.

தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளின் மூலம், கட்டிடப் பணிகள் உள்ளிட்ட எட்டு வகையான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது எளிதாகியிருக்கிறது. அதன்படி, குறிப்பிட்ட துறையுடன் பாதுகாப்புத் துறையும் சேர்ந்து அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். புதிய விதிமுறைகளின்படி ராணுவக் குடியிருப்புப் பகுதிகளின் நில மதிப்பு உள்ளூரைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுவால் நிர்மாணிக்கப்படும். சம மதிப்பு கொண்ட மேம்பாடு என்பது சந்தை மதிப்பைக் காட்டிலும் குறைவானதாக இருந்தால், மீதமுள்ள தொகையானது ராணுவத் துறைக்கு நேரடியாக அளிக்கப்பட்டுவிடும். மேலும், அப்பகுதிகளில் நிறைவேற்றப்படும் பொதுத் திட்டங்களின் தரத்துக்கு பாதுகாப்புத் துறையும் கூட்டுப்பொறுப்பு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x