Published : 21 Aug 2020 07:46 AM
Last Updated : 21 Aug 2020 07:46 AM
இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தமானது கடந்த சில ஆண்டுகளாகத் துளிர்விட்டு வந்த அரபு-இஸ்ரேலிய நட்புறவுக்கு முறையான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால் அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகமானது இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்து, அதனுடன் முறையான நட்புறவை உருவாக்கிக்கொள்ளும். தன் பங்குக்கு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையின் பகுதிகளைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் திட்டத்தை நிறுத்திவைக்கும். இஸ்ரேலை அங்கீகரிக்கும் மூன்றாவது அரபு நாடு, முதல் வளைகுடா நாடு ஐக்கிய அரபு அமீரகம்தான் என்பதைப் பார்க்கும்போது, இது ஒரு மைல்கல் ஒப்பந்தம் எனலாம். ஷியா முஸ்லிம்களைக் கொண்ட ஈரானுக்கு எதிராக சன்னி முஸ்லிம்களைக் கொண்ட அரபு நாடுகளும், யூதப் பெரும்பான்மையினரைக் கொண்ட இஸ்ரேலும் கூட்டுசேர்வதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுத்திருக்கிறது. அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுடனான தனது உறவை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்போவதாக இஸ்ரேல் கூறியிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தை மற்ற அரபு நாடுகளும் பின்பற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
1948-ல் இஸ்ரேல் ஒரு நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அரபு-இஸ்ரேலிய உறவு மிக மோசமானதாகவே இருந்துவந்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் அரபு-இஸ்ரேலிய உறவுக்கு நீடித்த நன்மை தரும் என்றாலும், பாலஸ்தீன விவகாரத்திலிருந்து அரபு நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களைத் துண்டித்துக்கொள்வதும் புலனாகிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது குறித்து இந்த ஒப்பந்தத்தில் எந்தப் பேச்சும் இல்லை. இஸ்ரேல் தனது 1967 வருடத்திய எல்லைக்குத் திரும்புவது குறித்து எந்த முடிவும் எடுக்காமலேயே ஒரு அரபு நாட்டுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறியிருக்கிறார். அரபு நாடுகளின் குழு ஆதரவுடன் சவூதி அரேபியா முன்னெடுத்த ‘அரபு அமைதி முயற்சி’யானது இஸ்ரேல் ஆக்கிரமித்த பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து அது விலகிக்கொண்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்போம் என்று கூறியது. ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராகவும் சிரியன் கோலன் ஹெய்ட்ஸ் பகுதியின் மீது இஸ்ரேலின் இறையாண்மையையும் ட்ரம்ப் அரசு அங்கீகரித்தவுடன் ஐக்கிய அரபு அமீரகத்துடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது முரண்பாடானதே. அரபு முன்னெடுப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெகுதூரம் விலகி வந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இப்போது நம் முன் உள்ள ஒரே கேள்வி, பாலஸ்தீன எல்லைகளை மனிதாபிமானத்துக்கு விரோதமாகவும் முறையற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதைக் கைவிட்டுவிட்டு, பாலஸ்தீனத்துடன் அது பேச்சுவார்த்தை நடத்துமாறு அழுத்தம் கொடுக்க அமீரகத்தால் முடியுமா என்பதுதான். அப்படிப்பட்ட அழுத்தத்தை அமீரகம் கொடுக்கவில்லை என்றால், இஸ்ரேலுடன் அந்த நாடு செய்துகொண்ட ஒப்பந்தத்தால் பாலஸ்தீனத்துக்குக் கொஞ்சமும் பலனளிக்காமல் போய்விடும். பாலஸ்தீனமும் மேற்கு ஆசியாவில் உருவாகிவரும் யதார்த்தத்தை உணர வேண்டும். அரபு-இஸ்ரேல் மோதல் முடிவுக்கு வரவிருக்கிறது; ஆனால், பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் எந்த இடைவெளியும் இன்றித் தொடரப்போகிறது என்பதுதான் வருத்தமளிக்கும் அந்த யதார்த்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT