Published : 30 Jul 2020 08:05 AM
Last Updated : 30 Jul 2020 08:05 AM
இந்திய அரசின் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை – 2020’ மக்களிடத்தில் ஏற்படுத்திவரும் அதிர்ச்சியும், எதிர்ப்புணர்வும் மிகுந்த நியாயமானது. பருவநிலை மாறுதல்கள் உண்டாக்கிவரும் சேதங்கள் இன்று வளர்ச்சி தொடர்பான உலகின் பார்வையையே புரட்டிப்போட்டுவரும் நாட்களில், எல்லா நாடுகளிலுமே சூழலோடு இயைந்த தொழில் கொள்கைக்கான குரல்கள் வலுவடைகின்றன. இந்தியாவிலும் ஏற்கெனவே உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளே பலவீனமாக இருக்கின்றன; அவை பலப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துவரும் நிலையில், அவற்றை மேலும் நீர்க்கச் செய்யும் விதமாக இருக்கிறது அரசு இப்போது கொண்டுவந்திருக்கும் வரைவு அறிக்கை.
எந்தவொரு திட்டமும் தொடங்கப்படுவதற்கு முன்பு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையிலேயே திட்டத்துக்கு அனுமதி அமையும் என்பதே முன்னதாக அமலில் இருக்கும் அறிவிக்கை வலியுறுத்தும் நெறிமுறை. இதில் முக்கியமான அம்சம் மக்களிடம் நடத்தப்படும் கருத்துக்கேட்பு. ஒன்றிய அரசு இப்போது கொண்டுவரவுள்ள திருத்தங்களோ பல பாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமானது மக்கள் கருத்துகேட்பு பலவீனமாக்கப்படுவதாகும். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேச நலனோடு தொடர்புடைய திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அவசியமில்லை என்பதோடு, மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே ஒரு திட்டத்தைத் தொடங்கவும் விரிவுபடுத்தவும் இந்தப் புதிய அறிவிக்கை வழிவகுக்கிறது. ‘தேசிய நலனோடு தொடர்புடைய திட்டங்கள்’ என்ற மறுவகைப்படுத்தலானது சுற்றுச்சூழல் அனுமதியிலிருந்து விலக்களிக்கவே உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு நினைத்தால் எந்தத் திட்டத்தையும் இந்த வரிசையின் கீழ் கொண்டுவர முடியும்; அதன் அடிப்படையில் பல திட்டங்களை மக்கள் மீது திணிக்க முடியும் என்ற அச்சத்தை எப்படிப் புறந்தள்ள முடியும்? ஆண்டுக்கு இரண்டு முறை சமர்ப்பிக்க வேண்டிய தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் தொடர்பிலான அறிக்கைகளை ஆண்டுக்கு ஒரு முறை சமர்ப்பித்தால் போதுமானது, சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகளுக்கு எதிராக அரசு அமைப்புகள் மட்டுமே வழக்குத் தொடர முடியும் என்பன உள்ளிட்ட புதிய திருத்தங்கள்; மக்கள் கருத்துகேட்புக்கான கால அவகாசம் 20 நாட்களாகக் குறைக்கப்படுவது எல்லாமும் அரசின் மீதான அச்சத்துக்கு வலு சேர்ப்பதாகவே இருக்கின்றன.
தொழில் துறை செயல்பாடுகளின் உடனடிப் பொருளாதாரப் பயன்களைத் தாண்டி, அவை நீடித்த நிலையான வளர்ச்சியாகவும் நாட்டின் இயற்கைச் சூழலை நாசமாக்கிடாததாகவும் இருத்தல் அவசியம். படிப்படியாக அதை நோக்கித்தான் இந்தியா பயணப்பட வேண்டும். அப்படியென்றால், இந்த அறிவிக்கையை அரசு கைவிட வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் எதிர்காலத்தை நாசமாக்கிக்கொள்ள முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT