Published : 09 Jul 2020 07:59 AM
Last Updated : 09 Jul 2020 07:59 AM
இந்திய – சீன ‘நடைமுறைக் கட்டுப்பாட்டு எல்லை’யில், இரு நாட்டுப் படைகளுக்கிடையில் நடைபெற்றுவந்த மல்லுக்கட்டு முடிவுக்கு வருவது நல்ல விஷயம். தற்போது இரு நாடுகளும் எல்லையோரத்தில் குவித்த படைகளை விலக்கிக்கொள்வது என்று எடுத்த முடிவானது, ஆசியாவில் உருவாகிவந்த அர்த்தமற்ற பதற்றத்தைக் குறைத்திருக்கிறது. ஆயினும், இரு நாடுகளுக்கு இடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடப்பதே பூரண அமைதிக்கு வழிவகுக்கும் என்பதையே சமீபத்திய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் படை விலக்கல் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தியாவும் சீனாவும் வெளியிட்ட அறிக்கைகளின் மொழி ஒரே மாதிரியாக இல்லை என்றாலும் ‘நடைமுறைக் கட்டுப்பாட்டு எல்லை’யில் சமாதானத்தையும் அமைதியையும் கொண்டுவருவதில் பெருமளவிலான கருத்தொற்றுமையை அவை வெளிப்படுத்துகின்றன. சீனப் படைகளை அவை முன்னேறிவந்திருக்கும் நிலைகளிலிருந்து திரும்பச் செய்வதே இந்தியப் படைகளின் விலக்கலையும் உறுதியாக்கும். இதற்கு கல்வான், ஹாட் ஸ்பிரிங்க்ஸ், கோக்ரா ஆகிய இடங்களிலிருந்து சீனத் துருப்புகள் பின்வாங்குவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் செய்வதைவிட சொல்வது சுலபமானது; ஏனெனில், படை விலக்கலை உறுதிசெய்யும் இந்தியத் துருப்புகளின் நடவடிக்கையின்போதுதான் கல்வானில் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அடுத்ததாக, ‘நடைமுறைக் கட்டுப்பாட்டு எல்லை’யின் பிற இடங்களிலும் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்றனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. படைகளை விலக்கிக்கொள்ளும் நடைமுறைகள் மட்டும் போதாது. துருப்புகள் எந்தப் புள்ளி வரைக்கும் செல்லலாம் என்பது வரையறுக்கப்படுவது மட்டுமல்லாமல், காலி செய்துவிட்டுச் சென்ற நிலைகளை மறுபடியும் ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். இந்தப் பிரச்சினை தொடங்குவதற்கு முன்பு இருந்த நிலையை இந்தியா மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில், லடாக்கில் பிரதமர் ஆற்றிய உரை அர்த்தமிழந்துபோகும்.
இரு தரப்பிலிருந்தும் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள், ராணுவரீதியிலான பேச்சுவார்த்தைகள், சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் அடுத்தடுத்து நடக்க வேண்டியுள்ளன. இதில் ஏற்படும் முன்னேற்றங்களை மக்களிடம் அரசு எடுத்துரைக்க வேண்டும். மேலும், கல்வானில் நடைபெற்ற மூர்க்கமான மோதலை இரு நாடுகளுமே ஒதுக்கிவைத்துவிட முடியாது. 20 இந்திய வீரர்களின் மரணத்துக்குக் காரணமான சூழலும் இந்த மோதல் எப்படி ஏற்பட்டது என்ற பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இனி ஒரு முறை இத்தகைய கொடூரம் நடக்காமல் இருப்பதற்கேற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். சர்ச்சைகள் ஏற்படும்போது பேசுவது என்கிற அணுகுமுறைக்கு மாறாக, சர்ச்சைகள் உருவாகாமல் இருப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நோக்கி எதிர்வரும் காலத்தில் இரு நாடுகளும் நகர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT