Published : 15 Jun 2020 06:53 AM
Last Updated : 15 Jun 2020 06:53 AM
கரோனா தொற்றால் நாட்டிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடும், மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நகரங்களில் ஒன்றாக சென்னையும் உருவெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசின் வெவ்வேறு நிலைகளில் இதுவரை மறைவில் இருந்த நிர்வாக அலங்கோலங்கள் இப்போது பட்டவர்த்தனமாக வெளிப்படலாகின்றன. தமிழக சுகாதாரத் துறையின் செயலர் பீலா ராஜேஷ் வேறொரு துறைக்கு மாற்றப்பட்டிருப்பதும், அவ்விடத்துக்கு முன்பே அந்தப் பதவியில் இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டிருப்பதும், விமர்சனங்களைத் திசை மாற்றிவிடும் நடவடிக்கையாகத் தெரிகிறதே அன்றி, முழுப் பரிசீலனைக்கு அரசு தன்னை ஆட்படுத்திக்கொள்வதாகத் தெரியவில்லை. முக்கியமாக, இதன் மூலம் என்ன செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது அரசு?
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கிருமிப் பரவல் தடுப்புச் செயல்பாடுகள், தொற்றாளர்களுக்கான சிகிச்சைகள், அரசின் தரப்பில் தினந்தோறும் வெளியிடப்படும் விவரங்கள் என அனைத்து விஷயங்கள் தொடர்பிலும் ஆரம்பத்திலிருந்தே கேள்விகள் எழுப்பப்பட்டுவந்தன. நாட்டிலேயே சுகாதாரத் துறையில் முன்னோடியான மாநிலத்தின் தலைநகரமான சென்னை மட்டுமே ஏனைய எல்லாத் தென்னிந்திய மாநிலங்களின் பாதிப்பைக் காட்டிலும் கூடுதலான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், அரசுத் தரப்பு எவ்வளவு உழைப்பைக் கொடுத்தாலும், கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும். ஏனென்றால், ஒவ்வொரு துறையினரும் இவ்வளவு உழைப்பைக் கொடுத்தும் ஏன் நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்கிற கேள்வி அரசியல் தலைமையின் செயல்திறனோடும், அமைச்சரவை – அரசு இயந்திரம் இரண்டின் ஒருங்கிணைப்போடும் தொடர்புடையது. அதன் தோல்வியே தொற்று எண்ணிக்கையின் அதிகரிப்பிலும், மக்கள் படும் அவதியிலும் வெளிப்படுகிறது.
இந்தியாவுக்குள் கரோனா நுழைந்தபோதே, கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேரின் ஆதாரமான சென்னைப் பிராந்தியமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை நிபுணர்கள் யாவரும் எச்சரித்தனர். குறிப்பாக, சென்னையின் நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக வாய்ப்புள்ளவர்கள் எல்லாம் சென்னையிலிருந்து வெளியேறுவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்ற யோசனையை ‘இந்து தமிழ்’ நாளிதழே தொடர்ந்து வலியுறுத்தியது. எப்படியும் சென்னையைப் பாதுகாக்க ஒரு செயல்திட்டத்தை அரசு உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், எதுவும் நடக்கவில்லை. வேலை, வருமானம் இல்லாத நிலையில், வீட்டு வாடகைக்குக்கூட வழியில்லாதால் அகதிகளைப் போல மக்கள் சென்னையிலிருந்து வெளியேறும் போக்கு இன்று உருவாகியிருக்கிறது. ‘மாநிலத்தின் ஏனைய பகுதிகளுக்குத் தொற்று இன்று சென்னையிலிருந்தே பரவலாகப் பரவுகிறது’ என்றால், அதற்கு யார் காரணம்?
தனக்கென்று ஒரு வியூகமே இல்லாமல் அந்தந்த நாளுக்கு ஒரு நடவடிக்கை என்று மக்களை வதைக்கிறது அரசு. ‘தொற்றுள்ளவர்களில் மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்களும்கூட வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறலாம்’ என்பது ஒரு நாள் நிலைப்பாடு என்றால், ‘பரிசோதனை செய்துகொள்பவர்களின் குடும்பமே இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பது ஒரு நாள் நிலைப்பாடு. ஒரு படுக்கையறை வசதிகூட இல்லாத குடிசைப் பகுதி மக்களுக்கு இது எவ்வகையிலேனும் நடைமுறைச் சாத்தியம் கொண்டதா? அதிகார வர்க்க மேட்டிமைத்தனம் என்பதற்கான உதாரணம் இதுதான்.
வரலாறு கண்டிராத ஒரு பெரும் சவாலை மாநிலம் எதிர்கொள்கையில் அனைத்துத் தரப்பினரின் அனுபவ ஆலோசனைகளையும் பெற்று, ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் இன்று வரை தமிழக அரசிடம் வெளிப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் அக்கறையான கேள்விகளையும்கூட அலட்சியமான நக்கலில் பதிலடி கொடுக்கவே முற்பட்டது ஆளுங்கட்சி. புகார்கள், குறைகள், விமர்சனங்கள் தொடர்பில் எவ்வளவு சகிப்பின்மையை இந்த அரசு வளர்த்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு மூத்த ஊடகர் வரதராஜன் பகிர்ந்த ஒரு காணொலிக்கான, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் எதிர்வினை ஓர் உதாரணம். ‘சென்னை மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது’ என்று ஒருவர் சொன்னால், அப்படி இல்லாதபட்சத்தில் அதற்கு உரிய விளக்கத்தை அரசு அளித்தாலே போதுமானது. அதற்கு மேலே நான்கு பிரிவுகளின் மேல் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் மிரட்டலுக்கான தேவை என்ன? கரோனா சிகிச்சையில் சென்னையில் பிரதான மையமான ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை ஆராய்ந்த ஒன்றிய ஆய்வுக் குழுவினர் அதன் போதாமைகளையும், மூத்த அதிகாரிகள் இடையேயான ஒருங்கிணைப்பின்மையையும் சுட்டிக்காட்டி அளித்த ஆய்வறிக்கை விவரங்களும் இதே நாட்களில்தான் வெளியாயின. அவர்களையும் மிரட்டிப் பார்க்க வேண்டியதுதானே?
இன்னமும்கூட நிலைமையின் தீவிரத்தை உணரவில்லை அல்லது எப்படியோ நிலைமை சில மாதங்களில் கட்டுக்குள் வந்துவிடும் என்று அரசு நினைக்குமானால், இந்த விவகாரத்தில் பெரும் தோல்வியையே அது சந்திக்க வேண்டியிருக்கும். கிருமித் தொற்று உச்சத்தைத் தொட்டுக் கீழே இறங்க மேலும் மூன்று மாதங்கள் ஆகலாம் என்கிற மருத்துவ நிபுணர்களின் கணிப்பு வேறு ஒரு அபாயத்தைச் சுட்டுவதாகவே இருக்கிறது. மூன்று மாதங்களானால் மழைக் காலம் தமிழ்நாட்டில் தொடங்கிவிடும் என்பதே அது. ஆக, அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுக்கக் கிருமியை ஒழிப்பதற்கான செயல்திட்டத்தை இனியேனும் அரசு வகுக்க வேண்டும். அந்தச் செயல்திட்டத்தின் முக்கிய அம்சமாக ‘சென்னையைப் பாதுகாத்தல்’ இருக்க வேண்டும். ‘ஒருங்கிணைந்த திட்டமிடல்’ எனும் வியூகத்துக்கு அரசு இனியேனும் மாறட்டும். சென்னை அன்றி தமிழ்நாட்டின் நிம்மதி இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT