Published : 14 May 2014 08:03 AM
Last Updated : 14 May 2014 08:03 AM

மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா?

அடுத்த புயல் தொடங்கியிருக்கிறது. ஆன்டிபயாடிக் எனப்படும் நோயுயிர்முறிகளைப் பற்றி மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நோயுயிர்முறிகளைக் கொண்டு அபாயகரமான கிருமிகளை நாம் அடக்கிவைத்திருப்பதாகவே வெகு காலமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். உலகின் முதல் நோயுயிர்முறியான பென்சிலின் மருத்துவத் துறையில் பெரும் புரட்சியைச் செய்தது. பென்சிலினைக் கண்டறிந்த அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்குக்கு நோபல் பரிசும் கிடைத்தது. மருந்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தினால் நோய்க்கிருமிகளுக்கு மருந்து எதிர்ப்புத் திறன் ஏற்பட்டுவிடும் என்று அவர் அப்போதே எச்சரித்திருந்தார். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.

நிறைய நோயுயிர்முறிகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுவந்தாலும் அவற்றைப் பொறுப்பற்ற விதத்தில் பயன்படுத்தியதன் காரணமாக மிகமிக வேகமாகவும் அளவுக்கு அதிகமாகவும் மருந்து எதிர்ப்புத் திறனை நோய்க்கிருமிகள் வளர்த்துக்கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லா நோயுயிர்முறிகளையும் முறியடிக்கக்கூடிய 'சூப்பர் பக்ஸ்' என்றழைக்கப்படும் மகாகிருமிகள் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. இருக்கும் மருந்துகளை முறையாகப் பயன்படுத்தாவிட்டாலும், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்காவிட்டாலும் கொள்ளை நோய்களின் யுகத்துக்கே நாம் திரும்ப வேண்டியிருக்கும். இந்த அச்சத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் உலகச் சுகாதார நிறுவனம், கிருமிகளின் மருந்து எதிர்ப்புத் திறன்குறித்து முதன்முதலாக வெளியிட்டிருக்கும் உலகளாவிய முதல் அறிக்கையும் இருக்கிறது. பாக்டீரியாக்களின் மருந்து எதிர்ப்புத் திறன் உலகின் அத்தனை பகுதிகளி லும் எப்படி ஒரு பெரும் மருத்துவப் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது என்பதை அந்த அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கிறது. “ஒருங்கிணைந்த உடனடி நடவடிக்கைகள் இல்லையென்றால், முன்பெல்லாம் மிக எளிதாகத் தீர்க்கப்பட்ட நோய்கள்கூட மறுபடியும் கொல்லக்கூடியவையாக மாறக்கூடிய காலத்தை நோக்கி நாம் தள்ளப்பட்டுவிடுவோம்” என்று உலகச் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் கெய்ஜி ஃபுகுதா எச்சரித்திருக்கிறார். தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பது, தூய்மையான சுற்றுப்புறம், சுத்தமான குடிநீர் போன்றவற்றின் அவசியத்தையும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இது மிகத் தீவிரமான பிரச்சினை. ஏனென்றால், வரவிருக்கும் காலத்தில் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய சுகாதார அச்சுறுத்தல் இதுவாகத்தான் இருக்கும் என்று சர்வதேச அளவில் முக்கியமான மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் 'நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம்’ (சி.டி.சி.) ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. ஒருபுறம், நோயாளிகளின் சுயசிகிச்சை இதற்குக் காரணம் என்றால், இன்னொருபுறம், சக்தி வாய்ந்த மருந்துகளை அளவுக்கு மீறியோ, தேவையற்ற சூழலிலோ மருத்துவர்கள் பரிந்துரைப்பதும், எந்தப் பரிசீலனையும் இன்றி நோயாளிகள் உட்கொள்வதும் இந்தியாவில் அதிகம். குறிப்பாக, 80 சதவிகித நோயுயிர்முறிகள் இந்தியாவில் தேவையற்ற வகையிலேயே பரிந்துரைக்கப்படுகின்றன என்கிறது உலக சுகாதார அமைப்பின் அறிக்கை. இதே நிலை நீடித்தால், சாதாரண நோய்களுக்குக்கூடப் பெரும் விலை கொடுக்கும் சூழல் உருவாகும்.

இந்திய அரசின் உடனடி சிகிச்சை தேவைப்படும் நோய் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x