Published : 27 Nov 2019 07:28 AM
Last Updated : 27 Nov 2019 07:28 AM
மேற்குக் கரையில் இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனர்களை விரட்டிவிட்டு ஆக்கிரமித்த பகுதியில் ஏற்படுத்தியுள்ள இஸ்ரேலியக் குடியிருப்புகள், ‘சட்ட விரோதமானவை அல்ல’ என்று ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சர்வதேச சட்டங்களுக்கும், உலக நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஏற்பட்டிருந்த கருத்து ஒற்றுமைக்கும் பெரிய சவாலாக இருப்பதுடன், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் ஏற்கெனவே தேக்கமடைந்த நிலையில் இருக்கும் சமரச முயற்சிகளை மேலும் சிக்கலாக்கிவிட்டது.
ட்ரம்ப் அரசு எந்தவித நிபந்தனையும் இன்றி யூதர்களின் தேசத்தை ஆதரிக்கிறது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிப்பதாக 2017 டிசம்பரில் அறிவித்தார் ட்ரம்ப். அதுவே சர்ச்சைக்குரிய முடிவுதான்; அடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதம், கோலான் குன்றுகளை இஸ்ரேலின் பகுதியாக ஏற்பதாக அறிவித்தார். 1967-ல் நடந்த போரில் சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றியதுதான் கோலான் குன்றுகள். இவை போதாது என்று இப்போதைய இந்த அறிவிப்பு இஸ்ரேலின் வலதுசாரிகளுடைய கரங்களை வெகுவாக வலுப்படுத்திவிடும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவை, பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச நீதிமன்றம் என்று சர்வதேச அமைப்புகள் எல்லாம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகளைச் சட்ட விரோதமானவை என்று அறிவித்துள்ளன. தான் ஆக்கிரமித்த நிலப்பகுதியில், தனது நாட்டு மக்களை எந்த நாடும் குடியேற்றக் கூடாது என்று ஜெனீவாவில் நடந்த நான்காவது சர்வதேச மாநாட்டில் ஏற்கப்பட்டது. இஸ்ரேலோ அந்த முடிவுக்கு எதிராகத்தான் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. மேற்குக் கரையில் இப்போது 4 லட்சம் யூதர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பாலஸ்தீனர்களின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலியர்களைப் பாதுகாப்பதற்காகச் சுவர் கட்டுவதாகக் கூறி, மேலும் அதிக பரப்பளவை ஆக்கிரமித்திருக்கிறது இஸ்ரேல். இவை பாலஸ்தீனர்களின் நடமாட்டத்தை அடியோடு குறுக்கிவிட்டது.
1967-ல் நாட்டின் எல்லைகள் எப்படி இருந்தனவோ அதே நிலையை மீண்டும் ஏற்படுத்தினால்தான் இங்கே இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகள் அரசை ஏற்க முடியும் என்று பாலஸ்தீனர்கள் தெளிவாகக் கூறிவிட்டனர். அத்துடன் எதிர்கால பாலஸ்தீன அரசுக்குத் தலைநகரமாகக் கிழக்கு ஜெருசலேம்தான் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஜெருசலேம் தொடர்பாக எந்த வாக்குறுதியும் தர மறுக்கிறது இஸ்ரேல் அரசு. 1948 போரின்போது வெளியேறிய பாலஸ்தீன அகதிகள் மீண்டும் திரும்பும் உரிமையையும் இஸ்ரேல் அங்கீகரிக்க மறுக்கிறது. அடுத்தது, எதிர்கால பாலஸ்தீன அரசின் எல்லை எது என்பது. மேற்குக் கரையின் பெரும் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்து யூதக் குடியிருப்புகளை ஏற்படுத்தி, தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டது. குடியிருப்புகளை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் எத்தனையோ முறை கேட்டுக்கொண்டது, இஸ்ரேல் செவிமடுக்கவே இல்லை. அப்படிப்பட்ட யூத அரசுக்கு விருது வழங்குவதைப் போல ட்ரம்ப் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இஸ்ரேல் இப்படியே தொடர்ந்து பிடிவாதமான ஆக்கிரமிப்பாளராக இருந்தால் இரு நாடுகள் பிரச்சினை என்பது தீர்க்க முடியாததாகவே தொடரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT