Published : 07 May 2014 09:24 AM
Last Updated : 07 May 2014 09:24 AM
ஒரு ஊடகம் ஒரு மனிதரைப் பேட்டி காணும்போது, அதை அப்படியே வெளிக்கொண்டுவருவதில் சிக்கல்கள் உண்டு. பேட்டி காணப்படுபவர் வெறுப்பான வார்த்தைகளை உமிழலாம்; ஆபாசமாகப் பேசலாம்; தேவையில்லாமல் நீட்டி முழக்கலாம். இதையெல்லாம் வெட்டி ஒட்டி மக்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டியது எதுவோ அதை மட்டும் கொண்டுசேர்ப்பதுதான் ஊடகங்களின் பணி. ஆனால், மோடி பேட்டியில் தூர்தர்ஷன் வெட்டி ஒட்டிய பகுதியை இந்த வகையில் சேர்க்க முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது.
தொலைக்காட்சி ஊடகங்கள் அடுத்து நடக்கவிருக்கும் நிகழ்வை இப்போதே ஒளிபரப்பப் போட்டியிடும் சூழலில்தான், நாட்டின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான மோடியின் பேட்டியை மூன்று நாள்கள் ஊறப்போட்டு ஒளிபரப்பியிருக்கிறது தூர்தர்ஷன். அதுவும் இந்தப் பேட்டியில் இடம்பெற்ற சில விஷயங்கள் கசிந்து, ஏனைய ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், அந்த விஷயங்களையே இருட்டடிப்பு செய்து ஒளிபரப்பியிருக்கிறது.
தூர்தர்ஷன் பேட்டியில், இந்தத் தேர்தலில் பிரியங்கா காந்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருவதுகுறித்தும் மோடியை அவர் விமர்சிப்பதுகுறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தன்னுடைய தாயாருக்காகவும் சகோதரருக்காகவும் ஒரு பெண் பிரச்சாரம் செய்வதும் பரிந்துபேசுவதும் இயல்பானது. இதில் தவறுகள் ஏதும் இல்லை; இதுகுறித்து நான் கருத்து சொல்லவும் ஏதும் இல்லை” என்று பதில் சொல்லியிருக்கிறார் மோடி. இந்த விஷயத்தை அரைகுறையாகக் கேள்விப்பட்டு சில ஊடகங்கள், “பிரியங்கா காந்தி என்னுடைய மகள் போன்றவர்” என்று மோடி கூறியிருந்ததாகவும் அதை தூர்தர்ஷன் நீக்கிவிட்டதாகவும் செய்தி வெளியிட்டன. இதைத் தொடர்ந்து, இது தொடர்பான கேள்விக்கு “நான் ராஜீவ் காந்தியின் மகள்; என் தந்தையின் இடத்தில் யாரையும் வைக்க முடியாது” என்று பிரியங்கா பதில் அளித்தார். உடனே அடுத்து, “உண்மையில் மோடி, பிரியங்கா என் மகள் போன்றவர் என்று சொல்லவே இல்லை” என்ற செய்திகள் கிளம்பின. இப்படி ஏனைய ஊடகங்கள் மாற்றி மாற்றி இந்த விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்க, தூர்தர்ஷனோ அந்தப் பேட்டியை ஒளிபரப்பியபோது பிரியங்கா தொடர்பான கேள்வி - பதிலையே நறுக்கிவிட்டது. 'தொழில்நுட்பக் காரணங்களுக்காக' இந்த நீக்கம் என்று விளக்கம் அளித்திருக்கிறது பிரஸார் பாரதி. அந்தத் 'தொழில்நுட்பக் காரணம்' செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரி தந்த நெருக்குதலாகவும் இருக்கலாம் என்று எழுந்திருக்கும் குற்றச்சாட்டின் நியாயத்தை மறுக்க முடியாது.
ஒருகாலத்தில் நாட்டிலேயே அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட தூர்தர்ஷன் இன்று பலராலும் சீண்டப்படாமல் இருக்க அடிப் படையான காரணங்களில் ஒன்று, ஆட்சியாளர்களின் பிடியில் அது சிக்குண்டு கிடப்பது. அதன் மோசமான நிலைக்கான உதாரணங்களில் ஒன்றுதான் இந்த விவகாரம். பிரஸார் பாரதியை உண்மையான தன்னாட்சி அமைப்பாக தேர்தல் ஆணையம்போல் - மாற்ற வேண்டும். முதலில் எதிர்க்கட்சிகள் இதற்கான முழக்கங்களை முன்னெடுக்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT