Published : 26 Aug 2019 07:46 AM
Last Updated : 26 Aug 2019 07:46 AM

மோட்டார் வாகனத் துறை: வீழ்ச்சி விடுக்கும் எச்சரிக்கை

இந்தியாவின் மோட்டார் வாகனத் துறையானது கடும் சரிவை எதிர்கொண்டுவருகிறது. அனைத்து வகையான வாகனங்களின் உள்நாட்டு விற்பனையும் கடந்த ஆண்டு ஜூலையைவிட தற்போது 19% குறைந்திருக்கிறது. பயணிகள் வாகனத்தின் விற்பனை 31% குறைந்திருக்கிறது. இது கடந்த 19 ஆண்டுகளில் மிகவும் குறைவான விற்பனை. கூடவே, இருசக்கர வாகனங்களின் விநியோகம் 17%, வாகனங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு விற்பனைக்கு அனுப்பும் தொழில் துறை 26% பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. இந்தியப் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அதில் மோசமான மந்தநிலை சமீபகாலமாக நிலவுவது தெரிந்தாலும், மோட்டார் வாகனத் துறையிலிருந்து கிடைக்கும் தரவுகள் அதற்கு உறுதியான சான்றாக அமைகின்றன.

ஒன்பது மாதங்களாகத் தொடர்ந்து பயணிகள் வாகன விற்பனை சுருங்கிக்கொண்டே வருகிறது. இதனால், விற்பனையகங்கள் மூடல்; முகவர்கள், உதிரிபாக விற்பனையாளர்கள், வாகனத் தயாரிப்பாளர்கள் ஆகிய தரப்பில் தொழிலாளர்களை வேலையிலிருந்து அனுப்புதல் என்று கடும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கிடையே மேலும் கடுமையான பணியிழப்புகள் ஏற்படும் என்று ‘மோட்டார் வாகன முகவர்கள் சங்கம்’ எச்சரித்திருக்கிறது. இப்பிரிவில் பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கெனவே வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘இந்திய மோட்டார் வாகன சங்கம்’ தங்கள் துறையில் கடந்த மூன்று மாதங்களில் வேலையிழப்பு நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

வங்கிகள் அல்லாத நிதித் துறை நிறுவனங்களில் பணத் தட்டுப்பாடு நிலவுவது, அதனால் வாகனங்கள் வாங்குவதற்குக் கடன் கொடுப்பது குறைந்திருப்பது, வாகனக் காப்பீட்டுக்கான தொகைகள் உயர்ந்திருப்பது, கார்கள், மோட்டார் வண்டிகள், ஸ்கூட்டர்கள் போன்றவற்றுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுவது ஆகியவை மோட்டார் வாகனத் துறையில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகளாகக் கூறப்படுகின்றன. கூடவே, கனரக வாகன விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவு, சரக்குப் போக்குவரத்தோடும் மக்களின் நுகர்வோடும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். வாகன விற்பனையின் எண்ணிக்கை வீழ்ச்சியானது ஒட்டுமொத்த பொருளாதார சுணக்கத்துக்கான அறிகுறியாகவும் பார்க்கப்பட வேண்டும்.

அடுத்து வரும் காலம் என்பது நிச்சயமாக மோட்டார் வாகனத் துறைக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கை கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் இந்திய நுகர்வோரின் நம்பிக்கை குறைந்திருப்பது தெரியவருகிறது. 63.8% பேர் எச்சரிக்கையோடும் நிதானமாகவும்தான் செலவழிப்போம் என்று கூறியிருக்கின்றனர். இதே நிலையோ அல்லது இதைவிட மோசமான நிலையோ இன்னும் ஒரு ஆண்டுக்கு நீடிக்கும் என்று அந்தக் கருத்துக்கணிப்பிலிருந்து தெரியவருகிறது. 2018-ல் இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவு 37.3% ஆக இருந்தது. மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பது அந்தத் துறையை மட்டுமே சார்ந்ததல்ல; ஒட்டுமொத்த பொருளாதார நிலையின் பிரதிபலிப்பு. உடனடியாக உரிய கொள்கை முடிவுகள் எட்டப்படவில்லை என்றால் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறது.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x