Published : 06 May 2014 08:30 AM
Last Updated : 06 May 2014 08:30 AM
மக்களவைப் பொதுத்தேர்தல் பெரிய வன்முறைகள் இல்லாமல் முடிந்துகொண்டிருக்கிறதே என்ற திருப்தி சூழும்போதே இடி விழுவதுபோல நடந்தேறியிருக்கிறது அசாம் இனக்கலவரம். போடோ இனத்தவருக்காகத் தனி மாநிலம் கோரும் போடோ பயங்கர வாதிகள், வங்க மொழி பேசும் 30-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
தனி போடோலாந்து கோரிக்கையை எதிர்க்கும் வேட்பாளருக்கு முஸ்லிம்கள் வாக்களித்துவிட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இந்தப் படுகொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, அசாமின் மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் உயிருக்கு அஞ்சி அரசு திறந்துள்ள முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தூப்ரி மாவட்டத்தில் கிராமங்களிலிருந்து போடோக்கள் வெளியேறி, தங்கள் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குப் பாதுகாப்பு தேடிச் செல்கின்றனர்.
போடோலாந்து கோரும் ‘போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணி'தான் இந்தப் படுகொலைகளின் பின்னணியில் இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அசாமின் பூர்வகுடிகளான போடோக்கள் மாநில மக்கள்தொகையில் 10% இருக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். பொதுச்சமூகத்தில் ஏனைய இனங்களுடன் கைகோப்பதில் கொஞ்சம் தயக்கம்காட்டும் போடோக்கள், வங்கத்திலிருந்து வரும் முஸ்லிம்கள் விஷயத்தில் மிகத் தீவிரமான எதிர் நிலைப்பாட்டில் இருப்பவர்கள்.
தங்களுடைய நிலங்களையும் வேலைவாய்ப்புகளையும் அவர்கள் பறித்துக்கொண்டுவிட்டதாக போடோக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர். அதில் உண்மையும் இருக்கிறது. இப்படியான வன்முறைகள் அசாமில் புதிதல்ல. 2008 அக்டோபரில் உடால்குரி, டராங் மாவட்டங்களில் நடந்த மோதல்களில் 60 பேர் இறந்தனர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுவாசல் இழந்தனர்.
2012 ஜூலையில் மீண்டும் போடோக்களுக்கும் வங்க மொழி பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் கோக்ரஜார், சிராங், தூப்ரி மாவட்டங்களில் நடந்த மோதல்களில் 105 பேர் இறந்தனர், 4.5 லட்சம் பேர் அகதிகளாயினர்.
ஆனால், இப்பிரச்சினையின் தீவிரம் இந்திய அரசியல்வாதிகளுக்குப் புரியவில்லை. இந்தியப் பிரிவினைக்குப் பின் 65 ஆண்டுகளான பின்னரும், வங்கதேசப் பிரிவினைக்கு 43 ஆண்டுகளுக்குப் பின்னரும் வங்கதேசத்திலிருந்து வரும் குடியேறிகளை ஓட்டுகளுக்காகத் தொடர்ந்து ஊக்குவித்துவருகிறது காங்கிரஸ். பா.ஜ.க-வோ வழக்கம்போல் இங்கும் இந்து -முஸ்லிம் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. அதிலும் இவ்வளவு கலவரங்களுக்கு நடுவிலும் ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்கத்தின் பன்ஸ்குராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நெருப்பை உமிழ்ந்திருக்கிறார் மோடி.
“வங்கதேசத்திலிருந்து வரும் ஊடுருவல்காரர்களைக் கண்டுபிடித்துத் திருப்பி அனுப்ப வேண்டும், வங்கதேசத்தில் தாக்கப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவரும் மக்களுக்கு குறிப்பாக, துர்காஷ்டமி அனுஷ்டிக்கும் மக்களுக்குப் புகலிடம் அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் பேசியிருக்கிறார். அதாவது, வங்கதேசத்திலிருந்து முஸ்லிம்கள் வந்தால் தடுத்துத் திருப்பி அனுப்ப வேண்டும், இந்துக்கள் வந்தால் வரவேற்க வேண்டும். எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் இத்தகைய அரசியல் மிகவும் அபாயகரமானது.குடியேறிகள் விஷயத்தில் இந்தியா தெளிவான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT