Published : 15 May 2014 10:00 AM
Last Updated : 15 May 2014 10:00 AM
இந்தியா போன்ற 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், அரசியல் அனுபவமே இல்லாமல், மக்களால் நாடாளுமன்றத்துக்கு நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாமல், நேரு குடும்பத்தில் பிறக்காமல், ஒருவரால் பிரதமர் பதவியில் அமர்ந்து 10 ஆண்டுகளை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடிந்திருப்பது சாதாரண விஷயமல்ல.
பொருளாதாரப் பேராசிரியர், ரிசர்வ் வங்கி கவர்னர், பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் அமைச்சரவையில் நிதியமைச்சர், பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சூத்திரதாரி என்று பல அவதாரங்களை எடுத்த மன்மோகன் சிங்கை பிரதமராக சோனியா காந்தி தேர்வுசெய்தது மிகப் பெரிய ஆச்சரியம். நேர்மையாளர், சுயநலம் இல்லாதவர், கர்வப்படாதவர், தன்னைப் பிரதமர் பதவியில் அமர்த்திய சோனியாவின் கண்ணசைவுக்கு ஏற்பச் செயல்பட்டவர் என்பதிலெல்லாம் சந்தேகமே இல்லை.
அவருடைய 10 ஆண்டு பதவிக் காலம் வலுவான பொருளாதார நிர்வாகம், சமூக ஒற்றுமை, வறுமை ஒழிப்பில் நடவடிக்கைகள், சமூகநலத் துறையில் சிறப்பான செயல்பாடு என்ற வெற்றிகளையும் கொள்கை வகுப்பதில் தீர்மானமாகச் செயல்பட முடியாத தேக்கநிலை, வரலாறு காணாத ஊழல்கள், அரசில் இடம்பெற்றுள்ள மற்றவர்களை அடக்கியாள முடியாத வலுவற்ற நிலை என்ற தோல்விகளையும் கொண்ட கலவை.
1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் என்பது தான் அவர் பிரதமர் பதவியில் அமர்வதற்கான தகுதியாக இருந்தது. அவரைப் பிரதமராகக் கொண்டுவந்ததன் நோக்கம் ஓரளவுக்குத்தான் நிறைவேறியது. பொருளாதாரத்தை வளப்படுத்துவதில் பெரும்பங்கு வகித்த மன்மோகன் சிங்கின் பிரதமர் பதவிக்காலத்தின் பிற்பகுதியில், அதே பொருளாதார நிலை தேக்கமடைந்தது, பணவீக்க விகிதம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது, தொழில் துறையில் உற்பத்தி குறைந்து வீழ்ச்சியாக மாறிவிட்டது, நிறுவனங்களின் பங்கு வெளியீட்டில் முதலீடு செய்யவே சாதாரண முதலீட்டாளர்கள் தயங்கும் காலமாகிவிட்டது.
ஆனால், மன்மோகன் சிங்கின் முழு பதவிக் காலத்திலும் இந்தத் தொய்வு இருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முதல் ஐந்தாண்டில் பொருளாதாரம் சராசரியாக 8.42% என்ற அளவில் வளர்ந்தது. 2006-07-ல் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 9.57% என்று சாதனை படைத்தது. இரண்டாவது ஐந்தாண்டுக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 6.70% ஆகக் குறைந்தது. கடைசி இரு ஆண்டுகளில் 5%-க்கும் கீழே போய்விட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உணவு உறுதிச் சட்டம், கல்விபெறும் உரிமைச் சட்டம், வன நிலங்களில் வனவாசிகள் பயன்பெறுவதை உறுதிசெய்யும் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், தொழில் வளர்ச்சிக்காக நிலங்களைக் கையகப் படுத்தும்போது விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்கான சட்டம், ஊனமுற்றவர்களுடைய நல்வாழ்வுக்கான சட்டம் என்று சமூகநலத் திட்டங்களில் அவருடைய ஆட்சிக்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப் பட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பு கருதி அவர் எடுத்த நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை என்றாலும், உலக அளவில் பல நாடுகளுடன் சுமுக உறவுக்கு வழிவகுத்தன. அவருடைய ஆட்சிக் காலத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் படிப்படியாகக் குறைந்துவந்தன. பாகிஸ்தான் மீது அமெரிக்கா தந்த நெருக்குதலும் அதற்கு ஒரு காரணம்.
ஜம்மு-காஷ்மீரின் எதிர்காலம் தொடர்பாக பாகிஸ்தானுடன் திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டிவிடும் நிலைக்கு அவர் சென்றார். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டையையே சர்வதேச எல்லையாக ஏற்க இரு நாடுகளும் தயாராக இருந்தன என்றும் தெரியவருகிறது. அவருடைய முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் அமெரிக்காவுடனான உறவு வலுவானது. இடையில் சில நெருடல்கள் ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான உறவு முன்பைவிட உறுதியாகியிருக்கிறது.
அதேசமயம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் எல்லைப்புறப் பாது காப்புக்கும் அவர் வகுத்திருந்த திட்டங்களில் பெரும்பாலானவை இன்னமும் காகிதத்திலேயேதான் குடிகொண்டிருக்கின்றன, செயல் பாட்டுக்கு வரவில்லை. இந்தியாவின் எரிபொருள் தேவைக்காக அணு மின் நிலையங்களுக்கான இடுபொருள்களைப் பெறுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
அரசியலில் அடித்தளம் ஏதுமில்லாமல் பிரதமர் பதவிக்கு வந்த மன்மோகன், காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் கண்காணிப்பின் கீழ் செயல்பட வேண்டியவரானார். மற்றவர்களாக இருந்தால் இதையே ஒரு தர்மசங்கடமாகக் கருதியிருப்பார்கள். மன்மோகன் ஒருபோதும் பொறுமை இழக்காமல், உண்மையான ஆட்சியதிகாரம் வேறிடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்தே பக்குவமாக நடந்துகொண்டார்.
மன்மோகன் சிங் மீது சோனியா மரியாதையைக் காட்டிக்கொண்டிருந்தாலும் இரண்டு அதிகார மையங்கள் இருந்ததும் சிறிது காலத்துக்குப் பிறகு, மூன்றாவது அதிகார மையமாக ராகுல் காந்தி உருவானதும் மன்மோகனின் செல்வாக்கைச் சீர்குலைத்தன. அரசின் நிர்வாகத்துக்கு உதவ சோனியா காந்தி தலைமையில் நிறுவப்பட்ட தேசிய ஆலோசனை மையம், ஒரு நிழல் அமைச்சரவையைப் போல முக்கியமான அரசு முடிவுகளைப் பரிசீலித்தும் ஒப்புதல் வழங்கியும் செயல்பட்டது. சோனியா காந்திக்கும் அவருடைய அமைப்புக்கும்தான் உண்மையில் அதிக அதிகாரமும் செயல்பாட்டுச் சுதந்திரமும் இருந்தது.
அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தன்னுடைய இயலாமையை மன்மோகன் சிங் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது மக்களிடையே அவருக்கிருந்த செல்வாக்கை ஒரேயடியாகச் சரித்து விட்டது. நேர்மையானவர், ஊழலுக்குத் துணைபோக மாட்டார்
என்று அவரைப் பற்றி இருந்த நல்லெண்ணம் அனைத்தும் அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் கரைந்துவிட்டது. காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2009-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்காக மன்மோகன் சிங் பாராட்டப்பட்டாலும் காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், நிலக்கரி வயல் குத்தகை ஊழல், முக்கியப் பிரமுகர்களுக்காக வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழல் என்று அடுத்தடுத்து ஊழல்களாக வெளிப்பட்டதால், மன்மோகனின் மீதிருந்த மரியாதை குறைந்து வெறுப்பே மிஞ்சியது.
குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், தங்களுடைய கூட்டணியில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று அவர் இயற்றிய அவசரச் சட்டம் (பின்பு ராகுல் தலையீட்டால் திரும்பப் பெறப்பட்டாலும்) அவர் மீதான மிச்ச சொச்ச நம்பிக்கையையும் துடைத்தெறிந்தது.
தன்னை விமர்சித்தோர், கண்டித்தோர், எதிர்த்தோர் என்று பலர் எரிச்சலூட்டிக்கொண்டிருந்தாலும் தனிப்பட்ட முறையில் பொறுமையையும் கண்ணியத்தையும் இழக்காத கனவானாகவே அவர் நினைவுகூரப் படுவார். பல சந்தர்ப்பங்களில் ‘பேசாமல் பேசியது' அவருடைய ‘மௌனம்'தான் என்றால் மிகையாகாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT