Published : 30 May 2014 10:43 AM
Last Updated : 30 May 2014 10:43 AM
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து பலர் மனதிலும் எழும் கேள்விகளுள் இதுவும் ஒன்று: மாநிலங்களுக்கான நிதிஒதுக்கீட்டைப் புதிய அரசு எப்படிச் செய்யும்?
அடுத்த ஆண்டு வரையில் பதவிக்காலம் இருக்கும் 13-வது நிதிக் குழு, மத்திய அரசின் வருவாயில் அதிகபட்சம் 39.5% அளவை மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது. அத்துடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான குழு, பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பின்தங்கிய நிலையைக் கருத்தில்கொண்டு அவற்றுக்குச் சிறப்பு நிதியுதவியை வழங்கலாம் என்று பரிந்துரைத்திருக்கிறது. மாநிலங்களின் தேவைகளை மட்டுமே கருத்தில் கொண்டு நிதியுதவி வழங்கப்படுவது கிடையாது. மாநிலங்களின் நிதிநிர்வாக நிலைமை, மத்திய அரசு கொடுக்கும் நிதி கடந்த ஆண்டுகளில் எப்படிச் செலவிடப்பட்டது, மாநிலங்களுக்குள்ள இயற்கை வளம், கனிம வளம், வேலைவாய்ப்புக்கான நிலைமை, எல்லையோர மாநிலங்கள் என்றால் பாதுகாப்புரீதியாக அதற்குத் தேவைப்படும் சிறப்புக் கவனம் என்று எல்லா அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும்.
கடந்த கால ஆட்சிகளின் காரணமாக பிஹார் எல்லாவற்றிலும் பின்தங்கியிருக்கிறது. எனவே, பிற மாநிலங்களுக்கு இணையான வளர்ச்சியை அடைய பிஹாருக்கு மிகப் பெரிய தொகையை, சிறப்பு அளிப்பாக அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் நிதீஷ் குமார் கோரினார். இதேபோல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தனிநபர் வருமான வரி, உற்பத்தி வரி (எக்சைஸ்), சேவை வரி என்று எல்லா பெரிய வரிவருவாய் இனங்களையும் மத்திய அரசு வைத்துக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் தொழில் வரி, விற்பனை வரி, பத்திரப்பதிவுக் கட்டணம் போன்றவற்றையே தங்களுடைய வருவாய் ஆதாரமாகக் கொண்டுள்ளன. மத்திய அரசைப் போல மாநில அரசுகளுக்கும் நிர்வாகப் பொறுப்புகள் அதிகம். ஆனால், அதற்கேற்ற வருவாய் ஆதாரங்கள் அவற்றிடம் இல்லை. இந்த நிலையில், நிதி ஆதாரங்களைத் திரட்டும் அதிகாரம் முழுவதும் மத்திய அரசின் கைகளில் குவியவிருப்பதாகத் தெரிகிறது. மாநிலங்கள் மத்திய அரசின் கையை எதிர்பார்க்கும் போக்கு அதிகமாகப் போகிறது. ‘மத்திய அரசு கொடுத்த நிதியை காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்தான் சரியாகச் செலவிடவில்லை’ என்று காங்கிரஸ்காரர்களும், ‘மாற்றுக்கட்சி ஆளும் மாநிலங்களுக்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படுவதில்லை’ என்று எதிர்க் கட்சிகளும் கடந்த தேர்தலின்போது மாறிமாறிக் குற்றம்சாட்டிக்கொண்டன. இந்த இரண்டு கூற்றுகளிலும் உண்மை இருக்கிறது. எனவே, நிதியைப் பிரித்துத் தருவதிலும் நடுநிலையான, நேர்மையான, அறிவுபூர்வமான, சட்டரீதியிலான வழியை உருவாக்குவதும் மிகமிக அவசியம்.
“நிர்வாகத்தைப் புதிய கண்ணோட்டத்தில் நடத்தப்போகிறேன். 125 கோடி மக்களுக்காகவும் இந்த அரசு செயல்படும்” என்று நரேந்திர மோடி அறிவித்திருப்பதால், அந்த நடவடிக்கையை இந்த நிதி ஒதுக்கீட்டிலிருந்தே தொடங்குவது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT