Published : 13 Mar 2015 09:14 AM
Last Updated : 13 Mar 2015 09:14 AM

மவுனத்துக்குக் கொடுத்த விலை

எதிர்பாராதது, இறுதியில் நடந்தே விட்டது. ஊழல் கறைபடியாதவர் என்று பெயரெடுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கே நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீது அலையலையாக ஊழல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டாலும் மன்மோகன் சிங்குக்கு இந்த குற்றச் செயல்களில் நேரடிப் பங்கு இருக்காது என்றே கருதி, அவரைப் பற்றிப் பேசாமல் எதிர்க் கட்சியினர்கூடத் தவிர்த்துவந்தார்கள். அதே வேளையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் தவறான செயல்களில் ஈடுபட்டபோது அதைத் தடுக்கத் தவறியதல்லாமல் எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் மன்மோகன் சிங் இருந்தார் என்று சாடினார்கள். இப்படியிருக்க, குற்றவியல் வழக்கில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., மன்மோகனுக்கு எதிராக பாதகமாக எதையும் குறிப்பிடாத நிலையில், சிறப்பு நீதிபதி பாரத் பராஷர் தாமாகவே இந்த வழக்கின் தன்மைக்கேற்ப அவருக்கு சம்மன் அனுப்பப்பட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார். ஒடிசா மாநிலத்தின் தலபிரா நிலக்கரி வயலில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலக்கரியை வெட்டி எடுக்கும் உரிமையைத் தருவது என்று முதலில் முடிவு செய்துவிட்டு, பிறகு ஆதித்ய பிர்லா தொழில் குழுமத்தின் ‘ஹிந்தால்கோ’ நிறுவனத்துக்கு வழங்கினார்கள். நிலக்கரித் துறை, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வசமே இருந்தது. எனவே, மன்மோகன் சிங், அப்போது நிலக்கரித் துறைச் செயலராக இருந்த பி.சி. பராக், தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா மற்றும் 3 பேர் உட்பட மொத்தம் 6 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அரசுக்குத் தலைமை தாங்கியதற்கான விலையை மன்மோகன் சிங் இப்போது கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

நிலக்கரித் துறைச் செயலரும், நிலக்கரித் துறைக்கான அமைச்சரும் (மன்மோகன் சிங்) எப்படியாவது இந்த நிலக்கரி வயல்களை ஹிந்தால்கோ நிறுவனத்துக்குப் பெற்றுத்தந்துவிட வேண்டும் என்று ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நீதிபதி பராஷர் ‘முதல் நோக்கில்’ வந்துவிட்டார். என்.எல்.சி. நிறுவனத்துக்கு ஒதுக்குவது என்ற முடிவுக்கு ஒப்புதல் தந்துவிட்டு, பிறகு தானே மீண்டும் அந்த முடிவை மாற்றியிருக்கிறார் மன்மோகன் சிங். ஹிந்தால்கோவுக்கு ஒதுக்குவதை விரைவுபடுத்துமாறு பிரதமரின் அலுவலகத்திலிருந்து நிலக்கரித் துறைக்குப் பல்வேறு நினைவூட்டல்கள் பறந்திருக்கின்றன. ஐமுகூ அரசில் ஒதுக்கப்பட்ட அனைத்து நிலக்கரி வயல் ஒதுக்கீடுகளையும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்த பிறகுதான் அரசு நிர்வாகத்தை எப்பேர்ப்பட்ட தீமை சூழ்ந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அதிகாரத்தில் இருக்கும்போது செய்யக்கூடாததைச் செய்வது எவ்வளவு தவறோ, அந்த அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் செயலற்றுப்போனதும் தவறு என்பது இப்போது புரிந்திருக்கும்.

மன்மோகனுக்கு சி.பி.ஐ. அமைப்பு சம்மன் அனுப்பவில்லை. நீதிபதிதான் வழக்கைப் படித்துப் பார்த்துவிட்டு அனுப்பியிருக்கிறார். ஆகவே, சிங் மீதான குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிரூபிப்பது நீதிமன்றத்தின் கடமையாகிவிட்டது. அதேபோல், மக்கள் முன்னே தனது நேர்மையை நிரூபிக்க மன்மோகன் சிங்கும் கடமைப்பட்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x