Published : 02 Apr 2014 10:17 AM
Last Updated : 02 Apr 2014 10:17 AM
ஜப்பானில் நடந்த மாநாட்டில் ‘பருவநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கிடையிலான குழு’ வெளியிட்டிருக்கும் அறிக்கை, உலகம் சந்திக்கவிருக்கிற பேரபாயங்கள்குறித்து மிகவும் பலமாக எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறது.
புவி வெப்பமாதலால் துருவங்களில் பனி உருகிக் கடல் மட்டம் உயர்வது, பசுங்குடில் வாயுக்கள் அதிக அளவில் வெளியிடப்படுவது, மீன் இனங்கள் துருவப் பகுதியை நோக்கிப் புலம்பெயர்வது அல்லது அழிந்துபோவது, பவளப்பாறைகள் அழிந்து போவது போன்ற, ஏற்கெனவே நமக்குத் தெரிந்த தகவல்களைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கும் தரவுகளை அடிப்படையாகக்கொண்டே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.
புவி வெப்பமாதலின் விளைவுகள் இதுவரை இருந்ததைவிட இன்னமும் தீவிரமாகும் என்று இந்த அறிக்கையிலிருந்து தெரிகிறது. இயற்கையில் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் என்றால், மனிதர்களிடை யேயும் சமூகங்களிடையேயும் ஏற்படப்போகும் பாதிப்புகள் மிகவும் அச்சமேற்படுத்தும் அளவில் இருக்கும் என்று இந்த அறிக்கை சொல்கிறது.
உணவு, நீர், இருப்பிடம் போன்ற அடிப்படை விஷயங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும்; மனிதச் சமூகத்தில் ஏராளமான புலம்பெயர்வுகள் நடைபெறும்; நீர் போன்ற அடிப்படை ஆதாரங்களுக்காகப் போர்கள் நடக்கும்; அதிக அளவில் மரணங்கள், உடல்நலப் பாதிப்புகள், வறுமை, பஞ்சம் போன்றவற்றைச் சொல்லி இந்த அறிக்கை நம்மை மேலும்மேலும் பயமுறுத்துகிறது.
புவி வெப்பமாதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றில் மூன்றாம் உலக நாடுகளின் பங்கு மிகவும் குறைவு. ஆனால், அவைதான் இந்தப் பேரழிவுகளையெல்லாம் அதிக அளவில் எதிர்கொள்ளவிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணமான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோ, சூழலுக்கு இயைந்த தொழில்நுட்பம் போன்ற, செலவு அதிகம் பிடிக்கும் நடைமுறைகளுக்கு மாறிவிடும்; தள்ளாடிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தைக் கொண்ட ஏழை நாடுகளும் அதே தொழில் நுட்பத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரைகளும் எச்சரிக்கை களும் வழங்கும்.
ஜப்பான் மாநாட்டின்போது 2,500 பக்க அறிக்கை உருவாக்கப் பட்டது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள ஏழை நாடுகளுக்கு ஆண்டு தோறும் ரூ. ஆறு லட்சம் கோடி தேவைப்படும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. செல்வந்த நாடுகள் பலவும் இதை எதிர்த்ததால், இந்த அறிக்கையின் 48 பக்கச் சுருக்க வடிவத்தில் மேற்கண்ட அம்சம் சேர்க்கப்படவில்லை.
இந்த ஆறு லட்சம் கோடி ரூபாயைச் செல்வந்த நாடுகள்தான் தந்தாக வேண்டும். இதற்கு ஒத்துக்கொண்டால், பின்தங்கிய நாடுகளுக்குத் தாங்கள் வழங்குவதற்கான நிதியுதவியை இருமடங்காக ஆக்கியாக வேண்டும் என்ற செல்வந்த நாடுகளின் அச்சம்தான் அவற்றின் எதிர்ப்புக்குக் காரணம். தங்கள் அகோரப் பசிக்காக இயற்கை யோடு விளையாடிவிட்டு, அதன் பாதிப்புகளை ஏழை நாடுகளின் மீது சுமத்திவிட்டு, இப்போது இந்தப் பிரச்சினைக்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என்பதுபோல் ஒதுங்க நினைக்கின்றன அந்த நாடுகள்.
எப்போதோ நடக்கப்போவதைப் பற்றியல்ல, தற்போது நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களை, அழிவுகளைக் குறித்தவைதான் இந்த அறிக்கை தந்திருக்கும் எச்சரிக்கைகள். உதாசீனப்படுத்தினால், விளைவுகளை ஏழை நாடுகள் மட்டுமல்ல, இறுதியில் செல்வந்த நாடு களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT