Published : 18 Apr 2014 10:00 AM
Last Updated : 18 Apr 2014 10:00 AM
கோடைக் காலம் தொடங்கினாலே வெயிலும் குடிநீர்த் தட்டுப்பாடும் பெரும் பிரச்சினைகள். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலையைவிட இப்போது தமிழ்நாட்டின் கிணறுகளில் நீர்மட்டம் மேலும் கீழே போய்விட்டது என்று அரசின் நிலத்தடி நீர் தகவல் மையம் அதிர்ச்சியூட்டியிருக்கிறது.
22 மாவட்டங்களில் முன்பிருந்ததைவிட இரண்டு மீட்டருக்கும் மேல் நீர்மட்டம் இறங்கிவிட்டது. சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 6 மீட்டர் முதல் 7 மீ்ட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. எந்த மாவட்டத்திலும் நீர்மட்டம் உயரவேயில்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்குப் பருவமழை நன்கு பெய்தால்தான் காவிரி டெல்டாவுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் தண்ணீர் அதிகம் கிடைக்கும்.
தண்ணீருக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுவிடவில்லை என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், பெரும்பாலான மாநகராட்சிகளிலும் நகராட்சிகளிலும் குடிநீரைத் தினசரி வழங்குவதை நிறுத்திவிட்டார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூரிலும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் 10 அல்லது 12 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விடப்படுகிறது. வேலூர் மாநகராட்சியிலோ வாரத்துக்கு ஒரு முறைதான். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. சென்னை மாநகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விடப்படுகிறது.
அ.தி.மு.க. தொடங்கிய திட்டங்களையெல்லாம் அப்படியே அமல்செய்ததாகக் கூறும் தி.மு.க., மழை நீர் சேகரிப்புத் திட்டத்தில் காட்டிய அக்கறை அனைவருக்கும் தெரியும். சென்னை நகருக்கு வீராணம் குடிநீரைக் கொண்டுவருவதில் வெற்றி கண்ட முதல்வர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தில் தற்போது அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு ஆண்டில் கிடைக்க வேண்டிய தண்ணீர் என்று ஐ.நா. வரையறுத்திருக்கும் அளவு 1,000 கனமீட்டர்கள். இதற்குக் கீழே இருந்தால் தட்டுப்பாடு நிலை என்று கருதப்படும். தமிழகத்தில் கிடைப்பதோ சராசரியாக 750 கனமீட்டர்கள் மட்டுமே. ஆக, தண்ணீர்தான் தமிழகத்தின் தலையாய பிரச்சினையாக ஒருசில ஆண்டுகளில் உருவெடுத்து நிற்கும். ஆனால், தமிழக அரசு அதைப் பற்றித் துளியும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை.
அரசு செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள குளம், குட்டைகள் போன்ற அனைத்தையும் மீட்டுத் தூர்வாரி, ஆழப்படுத்தும் செயல்திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் உடனே தொடங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை முழுக்க முழுக்க இதற்குப் பயன்படுத்த வேண்டும். அத்துடன் நதிக்கரைகளைச் சீரமைத்து, நதிகளில் சாக்கடை கலப்பதையும் தடுக்க வேண்டும். ஏரிகளை ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டுவது, ஏரிகளின் கரைகளை உடைப்பது ஆகிய செயல்களும் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
தமிழகம் இன்னொரு ராஜஸ்தானாக ஆவதைத் தடுக்க வேண்டுமென்றால், மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு, வனங்களைப் பெருக்குதல் போன்ற சீரிய திட்டங்களை அரசு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தியே ஆக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment