Published : 07 Apr 2014 10:04 AM
Last Updated : 07 Apr 2014 10:04 AM
புதிய வங்கிகள் தொடங்குவதுகுறித்துப் புதிய வழிமுறையைக் கையாளத் தொடங்கியிருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. வங்கியல்லாத நிதிச் சேவையில் ஈடுபட்டுவரும் அனுபவம் வாய்ந்த, நிர்வாகத் திறமையும் நேர்மையும் மிக்க நிதிநிறுவனங்கள் வங்கிகளைத் தொடங்க அனுமதி வழங்கலாம் என்ற கொள்கை முடிவையடுத்து, சில நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த உரிமங்களை வழங்குவதற்கு முன்னதாக மத்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலையும் பெற்றுச் செயல்பட்டிருக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.
புதிதாக வங்கித் தொழிலில் ஈடுபட விரும்பும் தனியார் நிதி நிறுவனங்களிடம் மனுக்களைப்பெற்று, அவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு, பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சிலருக்கு மட்டும் உரிமம் வழங்கும் நடைமுறைக்கு விடை கொடுத்திருக்கிறார் ரகுராம் ராஜன். இனி, இம்மாதிரியான மனுக்கள் அவ்வப்போது பெறப்பட்டு, அவ்வப்போது பரிசீலிக்கப்பட்டு, மனுதாரரின் தொழில்திறன் மற்றும் அவர் சேவை செய்ய விரும்பும் நுகர்வோர்களின் சேவையைக் கருதி அவ்வப்போது உரிமங்கள் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
இதனால், ஏற்கெனவே வங்கித் தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் மேலும் அக்கறையுடன் செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். புதியவர்கள் நவீனத் தொழில்நுட்பத்துடன் எளிமையான நடைமுறைகளைக் கையாளத் தொடங்கினால் வாடிக்கையாளர்கள் அவர்களை நாடத் தொடங்கிவிடுவர்.
அதுமட்டுமின்றி புதிய வங்கிகளைத் தொடங்கும் எல்லோரும் ஏற்கெனவே உள்ள வங்கிகள் செய்துவரும் வேலைகளையும் சேவைகளையும் செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் நீக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதாவது, குறிப்பிட்ட வகை வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட சேவைகளை மட்டும் நிறைவேற்ற விரும்பும் நிறுவனங்களுக்கும் வங்கியாகச் செயல்பட உரிமம் கிடைக்கும்.
வாகனங்கள் வாங்க மட்டும் கடன் தரும் நிதிநிறுவனம் வங்கி தொடங்க விரும்பினால் அந்தக் குறிப்பிட்ட நோக்கத்தை மட்டும் நிறைவேற்ற வசதியாக உரிமம் தரப்படும். பிற துறைகளுக்கும் சேவை செய்ய வேண்டும் என்பதுபோன்ற கட்டாயங்கள் நீக்கப்படும். இத்தகைய வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் திரட்டும் வைப்புத்தொகைகளை வேறு தொழில்களுக்குக் கடன்தருவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படும்.
அந்த வைப்புத்தொகைகளை ரிசர்வ் வங்கியிடமே கொடுத்து, அந்தத் தொகைக்கு உரிய வட்டியைப் பெற்று தங்களுடைய லாபத்தைப் பெருக்கிக்கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளரின் வைப்புத்தொகைக்கும் உத்தரவாதம் கிடைக்கும்.
வங்கித் துறையிலும் வங்கியல்லாத நிதிச் சேவைத் துறைகளிலும் குறிப்பிட்ட சில தொழில்களுக்காக, குறிப்பிட்ட பகுதிகளுக்காகக் கடன் தருவது நடைமுறையில் இப்போதும் இருக்கிறது. அத்தகைய நிறுவனங்களின் தனித்தன்மை கருதி, அவர்கள் வங்கி தொடங்கவும் அந்த வங்கிகள் சிறப்பாக நிர்வகிக்கப்படவும் ரிசர்வ் வங்கி சிந்தித்துச் செயல்படுவது பாராட்டுக்குரியது.
அரசுடைமை வங்கிகளிடம் கடன் பெற எல்லோராலும் எளிதில் முடிவதில்லை. துறைவாரியாக, தொழில் வாரியாக, பகுதிவாரியாக இப்படி வங்கிகள் புதிதாக ஏற்பட்டு சேவை செய்வதால், வங்கித் துறை விரிவடையும். மக்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். இந்த முயற்சிகளை உடனே வலுப்படுத்துவதுடன், வங்கிகள் நொடித்துப்போகாமல் இருக்கவும், மோசடிகளுக்கு இடம்தராமல் இருக்கவும் பாதுகாப்புகளையும் செய்வது ரிசர்வ் வங்கியின் கடமை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT