Published : 15 Apr 2014 09:10 AM
Last Updated : 15 Apr 2014 09:10 AM

மூத்தவர்கள் முடங்கியது ஏன்?

ஏன் இப்படிச் செய்தோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் பிற்காலத்தில் நினைத்து நினைத்து வருந்தும் செயல் நடந்தேறிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டனர். உடல் நலம் சரியில்லை, இளைய தலைமுறைக்கு வாய்ப்பு தருவதற்காக ஒதுங்கிவிட்டோம் என்றெல்லாம் காரணங்களைக் கூறியிருந்தாலும் தேர்தல் முடிவை நினைத்து அஞ்சியே இவர்கள் ஒதுங்குகிறார்கள் என்றே புரிந்துகொள்ளப்படும்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கு முன்னால் வந்த கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியைச் சரியாகவே கணித்திருந்தன. எனவே, தற்போதைய கணிப்புகளைக் கண்டு காங்கிரஸ் தலைவர்கள் இந்தத் தேர்தலில் ஒதுங்கிவிட்டனர். நிதியமைச்சர் ப. சிதம்பரம் இளைய தலைமுறைக்கு வழிவிடுவதாகக் கூறி, சிவகங்கையில் தன்னுடைய மகனையே காங்கிரஸ் வேட்பாளராக்கிவிட்டு ஒதுங்கிவிட்டார்.

ஜி.கே. வாசனும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகப் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டார். தொலைக்காட்சிகளில் காங்கிரஸுக்காக மாய்ந்து மாய்ந்து பேசும் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ் திவாரியும் உடல் நலக்குறைவு காரணமாகக் களத்திலிருந்து விலகிவிட்டார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியும் போட்டியிடுவதைத் தவிர்த்துவிட்டார்.

போட்டியிட்டால் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்ய முடியாது என்று சில தலைவர்கள் கூறியிருக்கின்றனர். கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்துகொண்டே போட்டியிடுகின்றனர். இப்படிப் போட்டியிட மறுத்ததன்மூலம் காங்கிரஸின் தோல்வியை முதலிலேயே ஒப்புக்கொண்டதாகிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கேலி செய்யும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

கட்சிக்கு உண்மையிலேயே இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாகக் கருதியிருந்தால் இந்த நேரத்தில்தான் மூத்த தலைவர்கள் போட்டியிட்டிருக்க வேண்டும்.

திறமையான, நேர்மையான ஆட்சியைத் தாங்கள் அளித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி நம்பினால் தேர்தலைச் சந்திக்க அச்சம் ஏன்? முதலில் தோழமைக் கட்சிகள் விலகின. அடுத்து மூத்த தலைவர்களே விலகியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நல்ல காலம், பா.ஜ.க. கூட்டணி வலுவாகவும் நாடு முழுக்க வெற்றியைக் குவிக்கும் வகையிலும் இல்லை. தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், ஒடிசா, மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு – காஷ்மீர் போன்றவற்றில் அந்தக் கட்சிக்கோ, கூட்டணிக்கோ வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

பா.ஜ.க. கூட்டணிகூட கடைசி நேர ஏற்பாடுதான். தொகுதி ஒதுக்குவதில் குழப்பம், வேட்புமனு தாக்கல் செய்வதில் குளறுபடியெல்லாம் நடந்திருக்கிறது. இதையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான துணிவு காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

மூத்த தலைவர்கள், கட்சியை முக்கியமான நேரத்தில் 'கை'கழுவி விட்டார்களோ என்று மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் மணிசங்கர ஐயர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் வட இந்தியாவில் கமல்நாத், அஜீத் ஜோகி போன்றோர் கட்சிக் கட்டளையை ஏற்றுக் களத்தில் புகுந்திருப்பது கட்சித் தொண்டர்களால் என்றென்றும் நினைவுகூரப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x