Published : 03 Nov 2014 09:27 AM
Last Updated : 03 Nov 2014 09:27 AM
பருவ மழை பொய்க்கும் என்றோ குறைவாகப் பெய்யும் என்றோதான் நமக்கு வழக்கமாகச் சொல்லப்படும். அந்தக் கணிப்பையெல்லாம் மீறிப் போதுமான அளவுக்கு இந்த முறை மழை பெய்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பருவ மழை தாராளமாகவே பெய்திருக்கிறது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடியை இவ்வாண்டில் இரண்டாவது முறையாக எட்டியிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் கொடைக்கானல் பகுதியில் பெய்த மழையால் பாலாறு, பொருந்தலாறு அணை, வரதமா நதி அணைக்கட்டு போன்றவற்றிலும் நீர்வரத்துப் பெருகியிருக்கிறது. 28 மாவட்டங்களில் வழக்கமான சராசரியைவிட இந்த முறை அதிகமான மழைதான். தமிழகத்தில் இந்தப் பருவத்தில் பெய்யும் சராசரி அளவான 151 மில்லி மீட்டரைவிட 35% கூடுதலாக இந்த முறை மழை பெய்திருக்கிறது.
இவ்வளவு நீரை அள்ளிக்கொடுத்திருக்கிறது பருவமழை. ஆனால், நாம் அதை எப்படிக் கையாள்கிறோம்? காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 53,000 ஏக்கர்களில் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. மழைநீர் தேங்கி, சென்னை நகரச் சாலைகள் மிகுந்த சேதத்துக்குள்ளாகியிருக்கின்றன. பிற மாவட்டங்களிலும் 4,765 கிலோ மீட்டர் நீளத்துக்குச் சாலைகள் ஆங்காங்கே சேதம் அடைந்துள்ளன. ஆக்க சக்தியான நீரை அழிவு சக்தியாக மாற விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். மழை கொட்டிக்கொண்டிருக்கும் அதே வேளையில், கேன்களில் அடைக்கப் பட்ட குடிநீருக்காக மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கும் காட்சிகளும், மாநகராட்சித் தண்ணீர் வாகனங்களுக்காக ஏழை, நடுத்தர மக்கள் அடித்துக்கொள்ளும் காட்சிகளும் அரங்கேறுவதுதான் விசித்திரம்.
தண்ணீர்த் தட்டுப்பாடு என்பது ஏதோ ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலை அல்ல. பல பத்தாண்டுகளாக நிலவும் பிரச்சினை அது. ஆனாலும், இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் தண்ணீரின் அருமையை நாமும் நமது அரசுகளும் கொஞ்சம்கூட உணர்ந்திருக்கவில்லை என்பது வேதனை. நமது நீர் சேகரிப்பு ஆதாரங்களையும் வடிகால் வழிவகைகளையும் பெரும்பாலும் இழந்து நிற்கிறோம் என்பதற்கான அடையாளங்கள்தான் ஏரிகளையும் குளங்களையும்விட அதிக அளவிலான நீர் தெருக்களிலும் சாலைகளிலும் தேங்கி நிற்பது.
முந்தைய அதிமுக அரசு கொண்டுவந்த மழைநீர் சேகரிப்புத் திட்டம் உண்மையிலேயே அற்புதமான திட்டம். ஆனால், தற்போது அந்தத் திட்டம் பராமரிப்பில்லாத குழந்தையைப் போல சூம்பிப்போய்க் காட்சியளிப்பதுதான் வேதனை. கடந்த ஓராண்டுக்குள் அந்தத் திட்டத்தின் முக்கியத்துவம்குறித்துப் பலமுறை ‘தி இந்து’ தலையங்கம் எழுதியிருக்கிறது.
ஜெயலலிதா கைதைத் தொடர்ந்து மாநில நிர்வாகம் கிட்டத்தட்ட முடங்கிப்போயிருக்கிறது. மாலுமி இல்லாத கப்பல்போலத் தமிழகம் தத்தளிக்கிறது. நெருக்கடியான நேரங்களில்கூட மக்களுக்கு உதவுவதைவிடவும் கட்சியிலும் ஆட்சியிலும் தங்கள் இடத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கான பாவனை அரசியல் செய்வதில்தான் அமைச்சர்கள் குறியாக இருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு ஏதாவது நல்லது செய்ய விரும்பினால் அவர்கள் செயலாற்ற வேண்டியது மக்களுக்கு மத்தியில்தான்.
இந்தப் பருவமழை தந்த பரிசைப் பல தலைமுறைகளுக்கான சீதனமாக மாற்ற வேண்டுமானால், அதற்கு அரசு நிர்வாகம் முதலில் இயங்க வேண்டும். இல்லையென்றால், மழையின் பரிசு சாபமாக மாறுவதைத் தடுக்க யாராலும் முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment