Published : 24 Nov 2014 08:40 AM
Last Updated : 24 Nov 2014 08:40 AM

சம்ஸ்கிருதமா, சம்ஸ்கிருதமயமாக்கலா?

பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அதிரடி முடிவுகளுக்கு எந்தக் குறையும் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேந்திரிய வித்யாலய பள்ளிக்கூடங்களில், “இனி ஜெர்மன் மொழி கற்றுத்தரப்பட முடியாது; அதற்குப் பதிலாக மாணவர்கள் சம்ஸ்கிருதத்தையோ, தாய்மொழி அல்லாத ஏதேனும் ஓர் இந்திய மொழியையோ படிக்கலாம்” என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்திருக்கிறார். சம்ஸ்கிருதத்தை மட்டும் குறிப்பிட்டால், அரசின் சம்ஸ்கிருதமயமாக்கல் நோக்கம் வெளிப்பட்டுவிடும் என்பதால், கூடுதல் தேர்வாக ஏதேனும் ஒரு இந்திய மொழியையும் சேர்த்து அறிவித்திருக்கிறார்கள். பிறமொழி கற்றலைப் பெரும்பாலும் பிழைப்புக்கான வழிகளில் ஒன்றாகக் கருதும் சமூகம் இது. இங்கே எந்த வட இந்தியர், தென்னிந்திய மொழி ஒன்றைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்? சம்ஸ்கிருதத்தை நோக்கித் தானாக வரட்டும் என்கிற எண்ணம்!

தமிழகத்தைத் தவிர, பிற மாநிலங்களில் மும்மொழித் திட்டம் அமலில் இருக்கிறது. இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி கற்பிக்கப்படுகிறது.

இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம், இந்திக்குப் பிறகு விருப்ப மொழியாக ஜெர்மன், பிரெஞ்சு, சீன மொழி, ஸ்பானிஷ் மொழி உள்ளிட்டவற்றுள் ஒரு மொழி கற்பிக்கப்படுகிறது. மூன்றாவது மொழியாக இந்திய மொழிதான் கற்பிக்கப்பட வேண்டும்; எனவே, ஜெர்மன் கற்பிக்கக் கூடாது என்கிறார் அமைச்சர்.

தாய்மொழியில் மாணவர்கள் படிக்கும் நாடுகளில் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கும் ஆய்வொன்றையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சம்ஸ்கிருதம் இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவருக்குத் தாய்மொழி? அதேபோல், ஜெர்மன் மொழியை நீக்கும் பள்ளியில், எந்த மாணவர் தாய்மொழியில் படிக்காமல் இருக்கிறார்? தமிழ்நாட்டில் வேண்டுமானால் தாய்மொழியில் படிக்காமலேயே தனியார் பள்ளி மாணவரும், இந்தி படிக்காமலேயே அரசுப் பள்ளி மாணவரும் பட்டம் பெற முடியும். பிற மாநிலங்களில் இரண்டுமே சாத்தியமில்லை.

கல்வி தொடர்பான எந்த ஒரு அவசர முடிவும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாக ஆகிவிடும். தவிர, எல்லாத் தரப்புக் கல்வியாளர்களையும் ஆலோசித்து எடுக்க வேண்டிய முடிவு அது. அரசு இந்த விஷயத்தில், மேற்கண்ட விஷயங்களுக்குத் துளியும் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதற்கு உதாரணம், இந்தக் கல்வி யாண்டு முடிய இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது. கேந்திரிய வித்யாலயத்தின் 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை பயிலும் சுமார் 64,000 மாணவர்கள் மூன்றாவது மொழியாக இந்தக் கல்வியாண்டில் ஜெர்மன் மொழியைப் படிக்கிறார்கள். மார்ச் வரைகூடப் பொறுத்திருக்க அரசால் முடியவில்லை. ஜெர்மன் மொழியை விருப்ப மொழியாகப் படிக்கலாம்; மூன்றாவது மொழியாக அல்ல என்று தற்போது சொல்கிறார் அமைச்சர். இந்நிலையில், அரசு அடுத்து போகவிருக்கும் திசையைக் காட்டுகிறார் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால். இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் சம்ஸ்கிருதம், அதைக் கட்டாயமாக்கச் சட்டம் தேவை என்று பேசியிருக்கிறார்.

உலகமயமாக்கல் சூழலில் அறிவியல், தொழில்நுட்பங்கள் போன்றவை மொழியைத் தீர்மானிக்கும் முக்கியமான சக்திகளாகி யிருக்கின்றன. இந்தத் துறைகளில் உலகமெல்லாம் ஆங்கிலத்தின் ஏகாதிபத்தியம் நிலவும் சூழலில், இந்திய மொழிகளை அந்தச் சவாலை எதிர்கொள்ளச் செய்வதற்கு அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. ஆனால், ஒரு பக்கம் உலகமயமாதலை ஆரத்தழுவிக்கொண்டே இன்னொரு பக்கம் வேதகாலத்துக்குச் செல்ல ஆசைப்படுகிறது இந்த விசித்திரமான அரசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x