Published : 07 Jan 2014 12:00 AM
Last Updated : 07 Jan 2014 12:00 AM
நாடு இரு முக்கியமான ஆளுமைகளை இழந்திருக்கிறது: தமிழகத்தில் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ என்று கொண்டாடப்பட்ட நம்மாழ்வார், பிஹாரில் ‘பொது நல வழக்குகளின் தாய்’ என்று கொண்டாடப்பட்ட கபிலா ஹிங்கொரானி.
நவீன வேளாண்முறை நல்லதா அல்லது கெட்டதா; அது நாட்டின் உணவுத் தேவைக்காக அறிமுகப்படுத்தப்பட்டதா அல்லது ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைத் தேவைக்காகத் திணிக்கப்பட்டதா எனும் விவாதங்கள் ஒருபுறமிருக்கட்டும். எல்லா நியாயங்களையும் தாண்டி, நவீன வேளாண்முறை கொண்டுவந்த அதீத ரசாயன உரப் பயன்பாடும் பூச்சிக்கொல்லிப் பயன்பாடும் ஏற்படுத்தும் கொடூர விளைவுகளை இன்றைக்கு நேரடியாக நாம் உணர்கிறோம். அதற்கு எதிராக அதன் ஆரம்பக் காலத்திலிருந்து தன் இறுதிக் காலம்வரை போராடியவர் நம்மாழ்வார்.
நவீன வேளாண் அறிவியல் பயின்று ஒரு விஞ்ஞானியாகத் தன் வாழ்வைத் தொடங்கியவர், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை உணர்ந்து, தன் வேலையையே விட்டார். சாகும்வரை விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த அவர், வெற்றுக் கோஷங்களோடு முடித்துக்கொள்ளாமல், தான் சொன்ன இயற்கை வேளாண்மையைச் சாத்தியமாக்கிக் காட்டிய முன்மாதிரி.
கபிலா ஹிங்கொரானியும் அப்படித்தான். பிஹாரில் எந்த ஆதரவும் இல்லாத விசாரணைக் கைதிகளுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்னரே ‘பொது நல வழக்கு’ தொடுத்தவர் அவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் எளியவர்களுக்காகவும் ஆதரவற்றவர்களுக்காகவும் வாதாடினார். 1979-ல் ஹுசைனாரா காட்டூனுக்காக அவர் வாதாடிய வழக்கு, அவருடைய சட்டப் போராட்டத்துக்கான ஒரு சான்று. அந்த வழக்கின்போதுதான் விசாரணைக் கைதிகளுக்கான முக்கியமான வழிமுறைகளை நீதிமன்றம் கொண்டுவந்தது. “விசாரணையே இல்லாமல் ஏராளமானோரை நீண்ட காலமாகச் சிறையில் வைத்திருக்கும் நடைமுறை என்பது உயிர் வாழ்வதற்கான உரிமையின் அடிப்படையில், ‘நியாயமானது, முறையானது’ என்று கருதுவதற்கு இடமில்லை.
விசாரணைக்கு முன்பு சிறைவைத்தல் குறித்து சட்டமும் நீதி மன்றமும் அவ்வப்போது தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு ‘நியாயமான, முறையான’ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். விரைவான விசாரணை என்பது, குற்றவியல் வழக்கில் மிகவும் முக்கியம். எனவே, இதில் தாமதம் என்பது நீதி மறுக்கப்படுவதேயாகும்” என்று அப்போதுதான் நீதிமன்றம் கூறியது. மேலும், “தான் விடுதலை பெறுவதற்கான சாத்தியங்களை நீதிமன்றம் மூலம் எதிர்நோக்கும் கைதிக்குத் தேவையான சட்டரீதியான உதவி களைச் செய்வது முக்கியம்” என்றும் கூறியது. இதனால், ஆயிரக் கணக்கான விசாரணைக் கைதிகளுக்கு விடுதலை கிடைத்தது.
மக்களுக்காகக் கடைசிக் காலம் வரை போராடிச் சென்றிருக்கிறார்கள் இருவரும். ஆனால், நாம் - அதாவது இந்த நாடு - இவர் களுக்குக் கொடுத்திருக்கும் கௌரவம் என்ன? ஏன் இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் பத்ம விருதுகளுக்கான பட்டியலிலோ, பாரத ரத்னா விருது பரிசீலனையிலோ இடம்பெறுவதில்லை?
அரசுக்குச் சங்கடமாக இருக்கலாம்; ஆனால், போராளிகளால்தான் வரலாறு எழுதப்படுகிறது என்பதை அரசு மறந்துவிடலாகாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT