Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM
சிறுநீரகப் பாதிப்பு என்பது எங்கோ, யாருக்கோ, எப்போதோ என்று கேள்விப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இந்தியாவில் கிட்டத்தட்ட ஆறு கோடிப் பேர் சிறுநீரகச் செயலிழப்பால் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனில், சிறுநீரகப் பாதிப்பால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது யூகிக்கக் கூடியது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையான 124 கோடியில், சுமார் 10% பேர் ஏதோ ஒரு வகையில் சிறுநீரக நோயால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர் என்கின்றன ஆய்வுகள்.
சிறுநீரகச் செயலிழப்பை எதிர்கொள்வோரில் சுமார் 31% பேருக்கு, ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை (டயாலிசிஸ்) தேவைப்படுகிறது. இது மிக அத்தியாவசியமான ஒரு சிகிச்சை. சிறுநீரகங்கள் செயலிழந்தால், உடலில் ஏற்படும் கழிவுகளை அவற்றால் வெளியேற்ற முடியாது. அப்படித் தேங்கும் கழிவுகள் உடலில் தேங்கி, நஞ்சாக மாறி உயிருக்கே ஆபத்தாகிவிடும். இதற்கான நிரந்தரத் தீர்வு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை. ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. முதல் சவால், மாற்றுச் சிறுநீரகம் கிடைப்பது; அடுத்து, சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு ஆகும் செலவு. அதைத் தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவருக்கு அளிக்கப்பட வேண்டிய தொடர் மருத்துவக் கவனிப்பு, அதற்காகும் செலவு, எல்லாமே லட்சங்கள்… எல்லாருக்கும் சாத்தியமான சிகிச்சையா இது? இந்தக் கட்டத்தில்தான் ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை பெரும் உதவியாக அமைகிறது. ஒருமுறை ரத்தச் சுத்திகரிப்புக்கு 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை இஷ்டம்போலக் கட்டணம் வசூலிக்கின்றன தனியார் மருத்துவமனைகள். எப்படியும் மாதம் 10,000 ரூபாய் செலவை ஒரு சிறுநீரக நோயாளியின் குடும்பம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சம்! எவ்வளவு பேரால் இதை எதிர்கொள்ள முடியும்? சிறுநீரக நோயாளிகள் அடிப்படையிலேயே பெரும் வலியையும் உடல் - மன அவஸ்தைக்கும் உள்ளாகுபவர்கள். அவர்களுக்குக் கூடுதல் சுமையாகவே இந்தச் சிகிச்சை அமைகிறது. இதனாலேயே பல குடும்பங்கள் நோயாளிகளைக் கைவிடும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றன.
இப்படிப்பட்ட நிலையில், அரசின் சிறப்புக் கவனம் அவசியமானதாகிறது. இந்தியாவில், தினந்தோறும் ரத்தச் சுத்திகரிப்பு செய்துகொள்வோரின் எண்ணிக்கை சுமார் 20,000. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யலாம் என்று 170 மையங்களைத்தான் அரசு அங்கீகரித்துள்ளது. நாட்டில் சிறுநீரகவியல் நிபுணர்கள் சுமார் 950 பேர்தான் இருக்கின்றனர்; 700 சிறுநீரகச் சுத்திகரிப்பு மையங்கள்தான் இருக்கின்றன, 4,000 சிறுநீரகச் சுத்திகரிப்புக் கருவிகள்தான் இருக்கின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். இதிலும் பெரிய சோகம் என்னவென்றால், இவற்றில் பெரும் பகுதி தனியார்வசம் இருப்பது. ஒரு பெரும் உடல்நலப் பிரச்சினையை எதிர்கொள்வதில் நாம் காட்டும் அசட்டைக்கும் அலட்சியத்துக்கும் உதாரணம் இந்த எண்கள். நோயாளிகளின் குரல்கள் உரத்ததல்ல; வலியும் ரணமும் மிக்க அவை முனகலாகவே வெளிப்படுபவை. அதனாலேயே அரசின் காதுகளுக்கு அவை கேட்காமல் போகின்றனவா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT