Published : 22 Oct 2013 09:39 AM
Last Updated : 22 Oct 2013 09:39 AM

வாழ்வதற்கு ஒரு நேரம்

நேரம் சரியில்லை என்று தனி மனிதர்கள் யோசிப்பது சகஜம். ஒரு நாடே அப்படி யோசித்தால்? யோசித்தால் என்ன யோசித்தேவிட்டது ஸ்பெயின். நாட்டின் நேரத்தை மாற்றுவதே ஸ்பெயின் நாடாளுமன்றத்தின் முன் இப்போதுள்ள முக்கிய விவகாரம்.

இதில் சுவாரஸ்யமான ஒரு வரலாறு உண்டு.

1942-ல் ஸ்பெயினை ஆண்டவர் பிரான்சிஸ்கோ பிரான்கோ. ஹிட்லரைப் போலவே சர்வாதிகாரியான இவர், ஹிட்லர் எதைச் செய்தாலும் அப்படியே ஸ்பெயினிலும் அமல்படுத்திவிடுவார். ஒருகட்டத்தில் ஜெர்மனியின் நேரத்தையே ஸ்பெயினிலும் பின்பற்ற வைத்தார். ஐரோப்பாவின் மேற்கில் - சர்வதேச நேரக்கோட்டில் இங்கிலாந்துக்கு அருகில் - உள்ள நாடு ஸ்பெயின். ஆனால், மத்திய ஐரோப்பாவில் உள்ள ஜெர்மனியின் நேரக்கோட்டுக்கு இணையாக நேரம் மாற்றப்பட்டதால், ஸ்பெயினில் இயல்பான பொழுது அளவுகளில் குழப்பம் உருவானது. இதைச் சரிக்கட்ட வேலை நேரத்தின் இடையே தூங்கும் கலாச்சாரம் ஸ்பெயினில் அனுமதிக்கப்பட்டது. இதனால், ஸ்பானியர்கள் காலையில் 9 மணிக்கு வேலைக்குச் சென்றால், மதியம் 2 மணி வரை வேலை செய்வார்கள். பிறகு வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுவார்கள். அப்புறம் ஒரு நல்ல தூக்கம். திரும்ப மாலை 5 மணி வாக்கில் மீண்டும் அலுவலகம். இரவு 9 மணி வரை வேலை. இப்படியே 71 ஆண்டுகள் ஓடிவிட்டன.

இப்போது உலகமயமாதல் சூழலில் - பொருளாதார நெருக்கடிகள் சார்ந்து, இந்த நேர நிர்ணயம் ஸ்பானியர்களை இக்கட்டில் தள்ளியிருக்கிறது. ஏனைய தேசத்தினரைப் போல, வருமானத்துக்காகக் கூடுதல் நேரமோ, இரட்டை வேலையோ பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், நேரக் குழப்படியால் ஏற்கெனவே வேலைக்கு நடுவே தூங்க வேண்டியிருக்கும் நிலையில், கூடுதல் வேலைக்காக இரவில் மேலும் கண் விழிப்பதோ, காலையில் முந்நேரத்தில் எழுவதோ அவர்களுடைய உடல் - மனநிலை, குடும்பச் சூழலைப் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. கணவனும் மனைவியும் சந்தித்துக்கொள்ள முடியவில்லை; சிறுவர்கள் காலையில் உரிய நேரத்தில் எழுவதில்லை; அவர்களை எழுப்ப பெற்றோரும் இருப்பதில்லை; குடும்பங்களில் அமைதியின்மை, தேசியக் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு, விபத்துகள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகள்.

கடைசியாக ஸ்பானியர்கள் நேர மாற்றத்துக்காக இக்னேஷியோ புகேராஸ் ஆணையத்தை அமைத்தார்கள். நேர மாற்றத்தைப் பரிந்துரைத்திருக்கும் ஆணையம், " எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் தனிப்பட்ட வேலைகள், எட்டு மணி நேரம் ஓய்வு முக்கியம்" என்று கூறியிருக்கிறது. நாடாளுமன்றம் விரைவில் நேர மாற்றத்தை அறிவிக்கலாம். நவீன வாழ்க்கைச் சூழலில், ஸ்பெயினைத் தாண்டியும் இதில் செய்தி உண்டு. ஒரு நாளை மூன்று எட்டு மணி நேரங்களாக எப்படிப் பிரிக்கிறோமோ அதில்தான் வெற்றிகரமான வாழ்க்கை இருக்கிறது என்பதே அது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x