Published : 31 Jan 2014 09:23 AM
Last Updated : 31 Jan 2014 09:23 AM

பொருளாதாரம் நட்பாதாரம்!

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் சமீபத்திய வருகை இந்தியா ஜப்பான் உறவை மேலும் நெருக்கமானதாக ஆக்கி யிருக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டதைப் போல, “ஜப்பானுடன் உறவை வளர்ப்பதுகுறித்து இந்தியாவில் இருவிதக் கருத்துகளுக்கு இடமே இல்லை.” கிழக்கு நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்வது என்ற இந்தியக் கொள்கையில் நடுநாயகமாக இருப்பது ஜப்பான்தான். இந்தியாவில் ஜப்பானியப் பிரதமர் தங்கியிருந்த 36 மணி நேரத்தில் பல துறைகள் சார்ந்தும் ஏராளமான உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கையெழுத்திட்டிருக்கின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளாகவே இரு நாட்டு உறவில் பாது காப்புத் துறைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுவருகிறது. இரு நாட்டுத் தலைவர்கள் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு; இரு நாடுகளின் பாதுகாப்புத் தொடர்பாக ராணுவத் துறைச் செயலர்கள், வெளியுறவுத் துறைச் செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை; கடல் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள்; இந்தியா அமெரிக்கா ஜப்பான் இடையிலான முத்தரப்புப் பங்களிப்பு என்று அந்த முக்கியத்துவத்தை வலுப்படுவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

ஜப்பானியப் பிரதமரின் வருகையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளில், ‘ஜப்பானில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்பு ஆணையத்துடன் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அடிக்கடி ஆலோசனை கலப்பது’ என்ற முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியக் கடற்படையும் ஜப்பானியக் கடற்படையும் 2013-ல் சென்னைக்கு அருகில் கடலில் கூட்டாகப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டன. இம்மாதிரியான கூட்டுப் போர் ஒத்திகைகளை இனி தொடர்ந்து அடிக்கடி மேற்கொள்ளும் முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. வானிலும் நீரிலும் பயன்படுத்தக் கூடிய விமானத்தையும் ஜப்பானியக் கடற்படை பயன்படுத்தும் சிறப்பு விமானத்தையும் இந்தியாவுக்கு விற்பது தொடர்பான பேச்சுவார்த்தையும் ஆக்கபூர்வமாக முடிந்திருக்கிறது.

இந்தியாவின் அடித்தளக் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் தாராளமாக உதவிவருகிறது. டெல்லி மும்பை இடையிலான தொழில்துறைக் கட்டமைப்புக்கு உதவிய ஜப்பான், சென்னை பெங்களூருவுக்கு இடையிலும் அப்படி உதவத் தயாராக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கான அணுமின் உற்பத்தி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சு நடக்கிறது.

ஜப்பானியப் பிரதமருடன் ஏராளமான ஜப்பானியத் தொழிலதிபர்களும் வந்திருந்தது இந்த உறவின் முக்கியப் பகுதி பொருளாதாரம் என்பதை நினைவுபடுத்தும். நிறைய பொருளாதார ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இந்தத் திசையில் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஏனெனில், 2012 13-ல் ஜப்பான் இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பு சுமார் ரூ. 1,11,660 பில்லியனாக இருந்தது. ஆனால், இது இந்தியாவின் மொத்த வர்த்தக மதிப்போடு ஒப்பிட்டால் 2.2% முதல் 2.5%தான். அதுவும் ஜப்பானின் மொத்த வர்த்தக மதிப்போடு ஒப்பிட்டால் வெறும் 1%தான். 2011-ல் ஒருங்கிணைந்த சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்துகொண்ட பிறகும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் அதிகரிக்கவில்லை. உறவில் காட்டும் நெருக்கத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய பகுதி இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x