Published : 19 Dec 2013 12:00 AM
Last Updated : 19 Dec 2013 12:00 AM

பேருண்மையும் பெரும் அச்சமும்!

நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டுடன் பத்தாண்டு கால காங்கிரஸ் கூட்டணியை முறித்திருக்கிறது தி.மு.க. கூடவே, பா.ஜ.க. கூட்டணிக்கும் வாய்ப்பில்லை என்று அறிவித்திருக்கிறது.

இரு கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்வதும் முறித்துக்கொள்வதும் அவரவர் உரிமை. அ.தி.மு.க. ஏற்கெனவே தனித்தோ அல்லது சிறிய அளவிலான கூட்டணியுடனோ பெரும்பான்மை இடங்களில் போட்டியிடும் முடிவில் உள்ள நிலையில், பா.ஜ.க-வுக்கு என இங்கு தனி செல்வாக்கு இல்லாத சூழலில், சமீபத்திய ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட பலத்த அடிக்குப் பின்னர், தி.மு.க. எடுத்திருக்கும் இந்த முடிவுக்குப் பின்னுள்ள அரசியல் கணக்கு யாருக்கும் புரிபடாதது அல்ல. ஆனால், அதைத் தாண்டிச் சொல்லப்படும் காரணங்களும் விளக்கங்களும் முக்கியமானவை.

பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியபோது சொன்ன ‘பொடா’ காரணம்போல, இப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினைகளை எல்லாம் கூட்டணி முறிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்வதைத் தன் கட்சியினரே நம்ப மாட்டார்கள் என்பதால், அவற்றைத் துணைக் காரணங்களாக்கி, காங்கிரஸுடனான தங்கள் பிணக்குக்கான ஏனைய தனிப்பட்ட காரணங்களை – கட்சி எதிர்கொண்ட பிரச்சினையாக்கி –வெளிப்படுத்தியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

“தேர்தலில் தி.மு.க. தனியாக நின்றாலும் நிற்குமே தவிர, மதிக்காத, அலட்சியப்படுத்தும் கட்சியிடம் கூட்டணி கொள்ளாது. நம்முடைய தம்பி ராசாவைச் சிறையிலே வைத்தார்கள்; இன்னமும் அவர்மீது வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ராசா மட்டும் அல்ல; என்னுடைய மகள் கனிமொழியை எட்டு மாதக் காலம் சிறையிலே வைத்து வாட்டி, இன்னமும் வழக்கு நடத்துகிறார்கள்… மத்தியப் புலனாய்வு அமைப்பு யாருடைய கைவாள்? அந்த அமைப்பு யார் கையிலே இருந்த ஆயுதம்? யாருடைய கையில் இருந்தது அந்த அமைப்பின் கடிவாளம்? தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட சங்கடம், கனிமொழி, ராசாவுக்கு ஏற்பட்ட களங்கம், இவை எல்லாம் காங்கிரஸ் ஏற்படுத்திய மாயை. இப்படி நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுடன் மீண்டும் போய்விடுவோம் என்று நீங்கள் தயவுசெய்து எண்ண வேண்டாம்” என்று பொருள்பட கட்சியினரிடம் பேசியிருக்கிறார் கருணாநிதி.

தமிழக காங்கிரஸார், “அலைக்கற்றை வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்யும் நிர்ப்பந்தத்தை காங்கிரஸ் ஏற்காததே தி.மு.க-வின் கோபத்துக்கு முக்கியக் காரணம்” என்று சொல்வதை உறுதிசெய்யும் வகையிலேயே இருக்கிறது கருணாநிதியின் பேச்சு. இந்தப் பத்தாண்டுகளில் காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தமிழக நலன் சார்ந்தும், தமிழ் மக்கள் நலன் சார்ந்தும் எவ்வளவோ பிரச்சினைகள் - நியாயமான காரணங்கள் தி.மு.க-வுக்கு இருந்தன. கடைசியில், அதன் தலைவர் ‘தன் மக்கள்’ நலன் சார்ந்தே அந்த முடிவை எடுத்திருக்கிறார்.

எல்லாவற்றையும் தாண்டி, தி.மு.க., காங்கிரஸ் இரு தரப்பின் பேச்சு – தகவல்களிலும் வெளிப்படும் பேருண்மைதான் நம்மைக் கவலைகொள்ளச் செய்கிறது. அது - இந்த நாட்டின் நீதி விசாரணை அமைப்புகள் எந்த அளவுக்கு அரசியல் கட்சிகளால் கைப்பாவையாகக் கையாளப்படுகின்றன என்பது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x