Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM
எவ்வளவோ சங்கடங்களுக்கு இடையிலும் சாதித்திருக்கிறார்கள் நம் விவசாயிகள். நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி இந்த ஆண்டு 2,630 லட்சம் டன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம்முடைய நிதி அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் இருவரின் சமீபத்திய பேச்சுகளும் இதை உறுதிசெய்கின்றன.
எல்லா வகை தானிய உற்பத்தியுமே இந்த ஆண்டு நன்றாக இருக்கிறது. கரும்பு, பருப்பு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்துகளின் விளைச்சலும் ஊக்கம் தருகிறது. தொழில் துறையும் சேவைத் துறையும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியை எட்டாத சூழலில், வேளாண் துறை இந்த ஆண்டு நமக்கு ஆறுதல்.
நடப்பு நிதியாண்டில் வேளாண் துறையிலும் அதைச் சார்ந்த இதரத் துறைகளிலும் வளர்ச்சி 4.6% ஆகவும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 4.9% ஆகவும் இருக்கும் என்று மத்திய புள்ளிவிவரத் துறை திரட்டிய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாகவே வேளாண் துறை சராசரியாக 4% வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்ல செய்தி. அதேசமயம், வேளாண் துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதில் அரசாங்கத்தின் குளறுபடிகளை வேளாண் துறையின் சமீபத்திய வெற்றி தோலுரித்துக் காட்டியிருக்கிறது. ஒருபுறம் அரிசி அதிகம் விளைந்தாலும் மறுபுறம் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் போகிறது. உணவுப் பணவீக்கம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாமல் தானிய சேமிப்புக் கிடங்குகள் நிரம்பிவழிந்து, பெருமளவில் தானியங்கள் வீணாகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வேளாண் துறையில் அரசின் கொள்கை கோதுமை, அரிசி, பருத்தி, கரும்பு போன்றவற்றின் சாகுபடிக்கே முன்னுரிமை தருகிறது. அடுத்த நிலையில்தான் பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் வருகின்றன. பிற பயிர்களைப் பொறுத்தவரை சந்தை விலை, விவசாயிகளின் ஆர்வம், தண்ணீர் கிடைப்பது ஆகியவற்றைப் பொறுத்தே சாகுபடிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதை என்னவென்று சொல்வது?
மீண்டும் மீண்டும் இந்த விஷயங்கள் நம் கவனத்தைக் கோருகின்றன. அரிசி, கோதுமை, கரும்பு மீதான அரசின் கவனம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு மற்ற உணவுப் பயிர்கள், தானியங்கள் மீதான அக்கறையும் முக்கியம். அதேபோல, ஓர் ஆண்டைப் போல இன்னோர் ஆண்டும் பருவ மழை பெய்யும் என்றோ விளைச்சல் நன்றாக இருக்கும் என்றோ எந்த நிச்சயமும் இல்லை. ஆகையால், உற்பத்தியான தானியங்களைப் பாதுகாத்துவைக்கப் போதுமான கிடங்குகளை உருவாக்குவது அரசின் உயர்கவனம் அளிக்க வேண்டிய நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். கிடைக்கும் வெற்றியை வீணாகாமல் காப்பதே வருங்கால வெற்றிக்கு அடிப்படையாக அமையும் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT