Published : 01 Nov 2014 08:53 AM
Last Updated : 01 Nov 2014 08:53 AM
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் என்று கருதப்படும் 627 இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பெயர்ப் பட்டியலை மூடி முத்திரையிட்ட கவரில் உச்ச நீதிமன்றத்திடம் அளித்துவிட்டது மத்திய அரசு. இந்த விவகாரத்தை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் அதை உச்ச நீதிமன்றமும் அளித்துவிட்டது. இத்தோடு முடிந்ததா கருப்புப் பண விவகாரம் என்ற கேள்வி எழுகிறது.
சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் பட்டியலில் உள்ள 627 பேர் மீதும் வழக்கு தொடுத்து பணத்தை மீட்க முடியுமா என்று தெரியவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊழல் களைப் பற்றிப் பேசிய கையோடு, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களை அரசு பாதுகாக்கிறது என்ற குற்றச் சாட்டை நரேந்திர மோடியும் பாஜகவின் பிற தலைவர்களும் தேர்தலுக்கு முன் தொடர்ந்து பேசினார்கள். இவர்கள் பதவிக்கு வந்தால் கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவந்துவிடுவார்கள் என்ற அசட்டு நம்பிக்கை சிலரிடம் தோன்றியது. இப்போதோ, பாஜகவின் நேர்மை பல்லிளிக்கிறது.
முதலில் ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கருப்புப் பணம் என்பது வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் தூங்க வில்லை, உள்நாட்டிலேயே தாராளமாகக் கண்ணெதிரில் ‘நடந்து’ கொண்டிருக்கிறது. வருமான வரிச் சலுகை, கம்பெனிகள் வரிச் சலுகை, ஏற்றுமதிச் சலுகை, இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகை என்று பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர் களுக்கும் அரசு தரும் சலுகைகள் ஏராளம். முறையான ரசீது இல்லாமலேயே பொருட்களைப் பெரிய பெரிய கடைகளும் விற்கும் வாய்ப்பும் தாராளம். அதுமட்டுமல்ல, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், பெருமுதலாளிகளுக்கு எத்தனை பினாமிகள் இங்கே உலவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன! முதலில் இங்கே திரிந்துகொண்டிருக்கும் கருப்புப் பணத்தை நாம் என்ன செய்யப்போகிறோம்?
எனவே, கருப்புப் பணத்தை அதன் தோற்றுவாயிலிருந்தே கணக்கில் கொண்டுவருவதற்கான நிர்வாக நடைமுறைகளை அரசு கொண்டுவர வேண்டும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையை விரைவாகவும் வலுவாகவும் நடத்த வேண்டும். வரிவிதிப்பு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். வரிச் சலுகைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். வரிகளை மதிப்பிடுவதையும் வசூலிப்பதையும் சீர்மைப்படுத்தினால் அரசுக்கும் வரிவருவாய் பெருகும். நேர்மையாக வரி செலுத்துவோருக்கு ஊக்குவிப்புகளையும் கவுரவங்களையும் அளிக்க வேண்டும். வரி ஏய்ப்பு நிரூபணமானால் தயவுதாட்சண்யம் பாராமல், வழக்கை இழுத்துக்கொண்டே போகாமல், கடுமையான தண்டனைகளை அளித்தால் கருப்புப் பணப் புழக்கம் தணியலாம்.
நோயைக் குணப்படுத்தாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் தணிக்கும் நடவடிக்கைதான் கருப்புப் பண ஒழிப்பு என்பது. நாம் கடைப்பிடிக்கும் உற்பத்தி முறைகளும் பொருளாதார அமைப்பும் தேர்தல் ஜனநாயகமும் வரி ஏய்ப்பையும் கருப்புப் பணத்தையும் அவ்வளவு லேசில் ஒழித்துவிடாது என்பதே உறுதி. அடிப்படையில் மாற்றம் இல்லாமல் கருப்புப் பணத்தை ஒழித்துவிடுவது சாத்தியமே இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT