Published : 16 Jan 2014 10:20 AM
Last Updated : 16 Jan 2014 10:20 AM
நாட்டின் மோசமான முறைகேடுகளில் ஒன்றை மோசமான முறையில் ஒப்புக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. எல்லாப் பிரயத்தனங்களும் தோற்று அம்பலமாகிவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில், “நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறு நடந்துவிட்டது” என்று ஒப்புக்கொண்டுவிட்டது. அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் அளவுக்குப் பேசப்படாவிட்டாலும் அதில் சம்பந்தப்பட்ட தொகையை விட இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட தொகை அதிகம் - கிட்டத்தட்ட ரூ.1.86 லட்சம் கோடி. அலைக்கற்றை முறைகேட்டைக் கூட்டணிக் கட்சியின்மீது சுமத்திவிட்டு காங்கிரஸால் தப்பித்துக்கொள்ள முடிந்தது.
ஆனால், நிலக்கரிச் சுரங்க முறைகேடு முழுக்க காங்கிரஸின் சொந்த அதிகாரத்தில், சுயக் கட்டுப்பாட்டில், முழுச் சுதந்திரத்துடன் மேற்கொள்ளப்பட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கடைப்பிடித்த நடைமுறைகளைத்தான் நாங்களும் கடைப்பிடித்தோம் என்று கூறுவது பா.ஜ.க-வும் காசுபார்த்தது என்று காட்டிக்கொடுக்க வேண்டுமானால் உதவுமே தவிர, நாட்டை நேர்வழியில் நடத்திச் செல்ல உதவாது.
இந்த ஊழலை மூடி மறைக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கோப்புகள் காணாமல் போயின. மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை அறிக்கையில் மத்திய அமைச்சர் ஒருவரே திருத்தங்களை மேற்கொண்டார். நிலக்கரி உரிமம் பெற்றவர்களில் பலருக்கு இந்தத் துறையில் முன் அனுபவமோ, நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான நிறுவனரீதியான வசதிகளோ இல்லை என்ற உண்மை தெரியவந்தபோது, நாட்டின் பொருளாதாரச் சக்கரத்தையே சுழல வைக்கும் ஒரு துறையில் இப்படியும்கூட ஒப்பந்ததாரர்களைத் தேர்வுசெய்வார்களா என்ற மலைப்பே மிஞ்சியது.
உரிமம் பெற்றவர்கள் நிலக்கரியையே வெட்டி எடுக்கவில்லை என்றபோது ஊழல் எப்படி நடைபெற்றிருக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கேட்டது இன்னும் நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. ஒருபுறம் நம் நாட்டில் கணக்கற்றுக் கிடைக்கும் நிலக்கரியை வெட்டியெடுக்க ஒப்பந்தம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சும்மா இருக்கிறார்கள். மற்றொருபுறம் வேறு யாரோ சட்ட விரோதமாக நிலக்கரியை வெட்டி எடுத்து விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள். அனல் மின்நிலையங்களும் பிற தொழில் நிறுவனங்களும் நிலக்கரிக்காகக் காத்துக்கிடக்கின்றன என்ற நிலையில் ஆஸ்திரேலியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் கப்பலில் நிலக்கரி தருவிக்கப்படுகிறது. இத்தனைக்கும் பிறகுதான் கூச்சமே இல்லாமல் “தவறு நிகழ்ந்துவிட்டது” என்கிறது அரசு. ஊழலுக்கு இன்னொரு வார்த்தை ‘தவறா?’
சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். தவறை ஒப்புக்கொண்டால் மட்டும் போதுமா; சரிசெய்யப்பட வேண்டாமா? ஒதுக்கீட்டில் தவறு நடந்துவிட்டது என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதை அப்படியே ரத்துசெய்வதுதானே நியாயம்? அலைக்கற்றை முறைகேடு அம்பலமானபோது உச்ச நீதிமன்றம் 122 பேரின் உரிமங்களை ரத்துசெய்த முன்னுதாரணமும், இதே நிலக்கரிச் சுரங்க முறைகேட்டு வழக்கில் 40 பிளாக்குகள் ஒதுக்கப்பட்டது ரத்துசெய்யப்பட்ட முன்மாதிரியும் ஏற்கெனவே இருக்கின்றன; அரசு, துளியும் தாமதிக்காமல் எல்லா ஒதுக்கீடுகளையும் ரத்துசெய்வதோடு, அரசின் எல்லா கனிம வளங்களையும் இனி பொது ஏலத்தில் விற்கும் பகிரங்க நடைமுறைகளைக் கொண்டுவர வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment