Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM

தொலைநோக்கு மருத்துவமனை ஆகட்டும்!

ஒருவழியாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகக் கட்டிடத்துக்கு வழி பிறந்திருக்கிறது. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகத்துக்காக தி.மு.க. ஆட்சியின்போது ரூ. 1,000 கோடியில் திட்டமிடப்பட்டு, பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட கட்டிடம். தமிழகத்துக்கே உரிய சாபக்கேடுகளில் ஒன்றான அரசியல் புறக்கணிப்பில் சிக்கியதன் விளைவாக, தலைமைச் செயலகம் இடம் மாறியபோது, கட்டிடம் பொலிவிழந்தது; ஒருகட்டத்தில் பாம்புகளின் புகலிடமானது. மக்களின் வரிப்பணம் இப்படியெல்லாம் பாழாகிறதே என்று பார்ப்பவர்கள் எல்லாம் சங்கடத்தோடு கடந்த இடத்தை இப்போது பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி அமைத்திருக்கிறது அ.தி.மு.க. அரசு.

புதிய தலைமைச் செயலகமாக இருந்த இடத்தை இப்படி மருத்துவமனையாக மாற்றத்தான் வேண்டுமா; இது சரியான முடிவா என்பதெல்லாம் இப்போது காலம் கடந்த கேள்வி. தலைமைச் செயலக மாற்றத்துக்குப் பின், அந்தக் கட்டிடத்தை அப்படியே விட்டுவிடாமல், ஏதோ பெயரளவிலான ஒரு மருத்துவமனையாக மாற்றிவிடாமல், உண்மையாகவே ஒரு பன்னோக்கு மருத்துவமனை வளாகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அளவில் அரசின் நடவடிக்கையை வரவேற்கத்தான் தோன்றுகிறது.

முதன்முதலில் இது தொடர்பான அறிவிப்பை 19.8.2011-ல் வெளியிட்டபோது, “இந்த மருத்துவமனை புது டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் விளங்கும்” என்று குறிப்பிட்டார் முதல்வர் ஜெயலலிதா. இப்போது நடைபெற்றுள்ள திறப்பு விழாவின்போதும்கூட, “ஏழை எளிய மக்களுக்கு, உயர்தர மருத்துவ வசதிகள் தங்குதடையின்றிக் கிடைக்க வேண்டும் என்கிற தமிழக அரசின் நோக்கத்தைப் பறைசாற்றும் நடவடிக்கைகளில் முத்தாய்ப்பாக இந்த மருத்துவமனை செயல்படும்” என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இந்த வார்த்தைகளை அரசு செயல்பாட்டில் காண்பிக்க வேண்டும்.

ரூ. 143.14 கோடியில் இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவைப் புனரமைப்புச் சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட ஒன்பது உயர் சிறப்புப் பிரிவுகள், 14 அறுவை அரங்கங்கள், 400 படுக்கைகளுடன் திறக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை ஒரு நல்ல தொடக்கம். ஆனால், அரசு எடுத்துக்கொண்டிருக்கும் பன்னோக்கோடு ஒப்பிட்டால், இது பல காத தூரப் பயணத்தை நோக்கி எடுத்துவைக்கப்பட்டிருக்கும் முதல் அடி என்றுதான் சொல்ல முடியும். மேலும், ‘எய்ம்ஸ்’ போன்ற ஒரு மருத்துவமனையாக இது உருவாக வேண்டும் என்றால், இதைச் சார்ந்து ஓர் உயர் மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்பட வேண்டும்.

ஒருகாலத்தில் முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் யாராக இருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் நாடும் இடமாக இருந்தவை அரசு மருத்துவமனைகள்தான். இன்றைக்குத் தனியார் மருத்துவமனைகள் அந்த இடத்தை ஆக்கிரமிக்கக் காரணம், அரசு மருத்துவமனைகள் பின்தங்கியதுதான். பழைய நிலையை மீட்பதற்கான அடிக்கல்லாக இந்த மருத்துவமனை அமையட்டும்!​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x