Published : 27 Mar 2014 10:07 AM
Last Updated : 27 Mar 2014 10:07 AM

ஏகாதிபத்திய நியாயம்

உலகை அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துவதற்கான அடிப்படைகளில் மருந்து உற்பத்தித் துறையும் ஒன்று. இப்போது அந்த நிறுவனங்களின் சார்பில் இந்தியாவுக்கு நெருக்குதல் தர ஆரம்பித்திருக்கிறது அமெரிக்கா.

நோயாளிகளுக்குக் கட்டுப்படியாகும் விலையில் மருந்துகளைக் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது. தங்களால் காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு இந்திய அரசு அனுமதி தருவதால் ‘அறிவுசார் சொத்துரிமை’ சட்டம் மீறப்படுகிறது, இதற்காக அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நிறுவனங்கள் கோரியுள்ளன.

இது தொடர்பாக இந்திய அரசை, அமெரிக்கா எச்சரிக்கும் தொனி கடுமையாகவே இருக்கிறது. இந்தியர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகளைத் தயாரித்தால், தங்களின் லாபம் சரிந்துவிடும், அத்துடன் மற்ற ஏழை நாடுகள் இந்த மருந்துகளை இந்தியாவிடமிருந்தே குறைந்த விலைக்கு வாங்கத் தொடங்கினால் தங்கள் நாட்டு நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துவிடும் என்பதும்தான் உண்மையான காரணம்.

மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் கொள்ளை லாபம் ஒன்றில் மட்டுமே அமெரிக்க நிறுவனங்கள் குறியாக இருக்கின்றன. உலக வர்த்தக ஒப்பந்தம் அனுமதிக்கிறது என்பதற்காகப் பிற நாடுகள் தயாரிக்கும் எல்லா மருந்துகளையும் இந்திய நிறுவனங்கள் தயாரிக்க அனுமதி தரப்படுவதில்லை. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து நிறுவனமொன்று தயாரித்த ஒரு மருந்து ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்த மருந்தில் செய்யப்பட்ட சிறிய மாற்றம்தான் என்பதால், காப்புரிமைச் சட்டத்தின் ஒரு ஷரத்து அனுமதிப்பதற்கேற்ப, அதை இந்தியாவில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் 2013-ல் அனுமதி வழங்கியது.

காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இதுபோல் ஓரிரு விதிவிலக்குகளைத்தான், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியா பயன்படுத்திக்கொண்டது. ஆனால், இந்த விஷயத்தில் பிற நாடுகளும் இந்தியாவைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்க மருந்து நிறுவனங்கள் கூக்குரலிடுகின்றன.

இந்தத் தருணத்தில் நாம் ஒரு விஷயத்தை நினைவுகூர வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்கக் குழந்தைகளுக்காகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளை, பின்தங்கிய நாடுகளில் இருக்கும் குழந்தைகளிடம் வெள்ளோட்டம் விட்டுப் பரிசோதிப்பதற்காக அனுமதி அளித்தார். இதற்கு ஒத்திசைவாக, இந்தியா தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று 2012-க்கும் 2013-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் மருந்து வெள்ளோட்டத்தால் 4,000 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. ஆனால், அரசாங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி மேற்கண்ட கால இடைவெளியில் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 506 பேர், மரணமடைந்தவர்கள் 89 பேர்.

இவை நமக்குத் தெரிவிக்கும் விஷயம் இதுதான். பன்னாட்டு நிறுவனங்களின், முக்கியமாக அமெரிக்க நிறுவனங்களின் சோதனைக் கூட எலிகள்தான் நாம். வெள்ளோட்டத்துக்காக பின்தங்கிய நாடுகளின் ஏழைகளைப் பயன்படுத்திக்கொள்வார்களாம், ஆனால் பலியாடுகளாக்கப்பட்ட அந்த மக்களுக்கு மருந்துகளைக் கொள்ளை விலையில் விற்பார்களாம். இதுதான் ஏகாதிபத்திய நியாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x