Published : 18 Feb 2014 09:12 AM
Last Updated : 18 Feb 2014 09:12 AM
ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின் ‘முடிவு’ என்பது அதன் ‘தொடக்கத்திலேயே’ முடிவாகிவிட்ட ஒன்று. ஆட்சி அமைக்க அர்விந்த் கேஜ்ரிவால் முதலில் தயக்கம் காட்டினார். பெரும்பான்மை இல்லாதது ஒரு காரணம் என்றால் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுடன் சம்பந்தப்பட கேஜ்ரிவால் விரும்பவில்லை என்பது மற்றுமொரு காரணம்.
அந்தக் கட்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டால், ஊழலுக்கு எதிரான போராளிகளாகத் தங்களை முன்வைத்துக்கொண்ட ஆ.ஆ.க-வுக்குப் பெரும் களங்கம் ஏற்படும் என்ற பயம் கேஜ்ரிவாலுக்கு இருந்தது.
ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஒரு விஷயம் எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்தது. காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாகத் தங்கள் கட்சியை முன்வைக்க டெல்லி என்ற களத்தைவிட, தேசம் என்ற பெரிய களத்தையே அவர்கள் குறிவைத்திருக்கிறார்கள் என்பதுதான் அது. நாடாளுமன்றம்தான் ஆ.ஆ.க-வின் அறுதி இலக்கு.
ஆ.ஆ.க. டெல்லியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து டெல்லி மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் அம்பலமாக்குவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்ததுபோல் தெரிகிறது. முதல்வராகத் தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதைவிட, தான் முதல்வராகச் செயல்படாமல் தடுக்கப் படுகிறேன் என்பதை நிரூபிப்பதிலேதான் அவர் குறியாக இருந்ததாகத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகக் குறைவான கால அவகாசமே இருக்கிறதென்பதால், மக்களிடம் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.
எனவேதான், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் எதிர்க் கட்சிகள் தன்னை முடக்கிவிட்டன என்ற பரிதாபப் பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்த கேஜ்ரிவால் முயன்றிருப்பதுபோல் தெரிகிறது. தனது வெளியேற்றத்தை நிகழ்த்திக்கொள்ள ஜன் லோக்பால் மசோதாதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதியிருக்கலாம். ஊழல் ஒழிப்பு, ஜன் லோக்பால் ஆகியவற்றை முக்கியக் கொள்கைகளாக அறிவித்து ஆட்சிக்கு வந்திருப்பதால், இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மக்களின்
அனுதாபத்தைப் பெற முடியும் என்று அவர் எண்ணியிருக்கலாம். இந்த மசோ தாவை சட்டமன்றத்தில் அவர் முன்வைத்த விதமே அது
நிறைவேற வேண்டும் என்பதைவிட, எதிர்க் கட்சிகளைப் போருக்கு அழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்ததுபோலத்தான் இருந்தது. அரசியல் அமைப்புக்கு உட்பட்டு, எதிர்க் கட்சிகளால் எதிர்க்க முடியாத விதத்தில் அந்த மசோதா நிறைவேறுவதை உறுதிப்படுத்து வதைத்தான் ஆ.ஆ.க. செய்திருக்க வேண்டும். `அடித்தால் மொட்டை, வைத்தால் குடுமி' என்ற அணுகுமுறையை எல்லா விஷயங்களிலும் மேற்கொள்வது அவருடைய கட்சிக்கு எந்த நன்மையையும் தராது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துவிட்டு அம்பானியுடன் காங்கிரஸையும் பா.ஜ.க-வையும் அம்பலப்படுத்த முயற்சித்ததுதான் கடைசியில் கிடைத்த ஒரே ஆதாயம். காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு பிரதானக் கட்சிகளுக்கும் தர்மசங்கடமான நிலைதான் இது.
ஊழலுக்கு எதிரான இயக்கத்தை ஓர் அரசியல் இயக்கமாக மாற்றியதில் கேஜ்ரிவால் வெற்றிபெற்றார். ஆனால், அந்த அரசியல் இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதில் அவருக்குச் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT