Published : 30 Jan 2014 09:22 AM
Last Updated : 30 Jan 2014 09:22 AM

துவேஷம் பேரவமானம்!

உலகெங்கும் நிறவெறியின் அடிப்படை இலக்கு கருப்பு என்றால், இந்தியாவில் வெள்ளையையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வறுமை, வேலைவாய்ப்பின்மை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம்பெயரும் வட கிழக்கு மாநிலங்களைச் சார்ந்தோர் மீதான வெறுப்புணர்வு பெருகிக் கொண்டேபோவதை அழுத்தமாகச் சொல்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

தேசிய மகளிர் ஆணையம் தூண்டுகோலாக இருந்த இந்த ஆய்வின் போது, ஆய்வை மேற்கொண்டவர்களிடம் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல சங்கடங்களைப் பட்டியலிடுகிறார்கள். டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பது, கடைகளில் அவர்கள் வாங்கும் சாதனங்களுக்குக் கூடுதல் விலையை நிர்ணயிப்பது, வாடகைக்கு வீடு தர மறுப்பது, அப்படித் தர நேர்ந்தால், அதிக வாடகையை நிர்ணயிப்பது, பெண்களைக் கையைப் பிடித்து இழுப்பது, உரசுவது, கேலி செய்து பாட்டுப் பாடுவது, வெளிநாட்டவர் என்று நினைத்து வாய்க்கு வந்தபடி திட்டுவது, பணியின்போது தொல்லை தருவது என நீள்கின்றன சங்கடங்கள். ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் ஆய்வில் பங்கேற்றவர்களில் 80% பேர் காவல் துறையிடம் புகார் செய்ய விரும்பவில்லை என்றும் அதே சமயம், ஊருக்குத் திரும்புவதையும் விரும்பவில்லை என்றும் அந்த ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து எனத் தங்கள் சொந்த மண்ணை விட்டு வளர்ந்து வரும் மாநிலங்களை, முக்கியமாக டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களை நோக்கி இவர்கள் படையெடுக்க ஒரே காரணம், பிழைப்பு. உண்மையில், அவர்களுக்கு வேலை தருவதாகக் கூறி, பெருநகரங்கள் அவர்களைச் சுரண்டவே செய்கின்றன. குறிப்பாக, அடிமட்ட வேலைகளில் இருக்கும் தொழிலாளர்கள் கொத்தடிமை களாகவே நடத்தப்படுகிறார்கள்.

ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வரை கடுமையாக அவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கவைக்கப்படும் இடம் அனல் கக்கும் தகரக் கொட்டகைகள். கூலி தவிர்த்து, வேறு எந்தச் சலுகைகளும் வழங்கப்படுவது இல்லை. கூலியும் உள்ளூர்த் தொழிலாளர்களைவிடவும் குறைவுதான். இந்தக் குறைந்தபட்சக் கூலியிலும் சரிபாதிக் கூலியை அவர்களை இங்கு அழைத்து வந்த முகவர்கள் வாங்கிக்கொள்கிறார்கள். கிட்டத்தட்ட அந்தத் தொழிலாளர்கள் விலங்குகளாகவே நடத்தப்படுகிறார்கள். வேலைக் களத்தில் இப்படிச் சூறையாடப்படுபவர்களை வெளியிலும் சீண்டிப் பார்க்கிறோம் எனில், இந்த வக்கிரத்தை இனவெறி என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்வது?

இயற்கை வளங்கள் கொழிக்கும் வட கிழக்கு மாநிலங்களைப் பெருநிறுவனங்களின் சூறையாடலுக்கு விட்டுவிட்டு, அந்த மண்ணின் பழங்குடிகள் இப்படி ஊர் ஊராகப் பிழைப்புக்கு அலைய மூலகாரண மான மத்திய அரசு, அங்கு கல்வி - தொழில் வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கட்டும்; பிழைப்புக்காக இப்படி இடம்பெயரும் தொழிலாளர்கள் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய மாநில அரசுகளை முடுக்கிவிடுவது உடனடியாகச் செய்யப்பட வேண்டியது. இன துவேஷ அடிப்படையிலான சீண்டல் களுக்குத் தீண்டாமைக்கு நிகரான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். துவேஷம் எந்த வடிவிலானாலும் சமூக அவமானம் என்பது உணர்த்தப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x