Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM
வீ ரப்பன் கூட்டாளிகளாகக் கருதப்படும் நான்கு பேர் உள்ளிட்ட 15 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும்கூட.
வீரப்பன் கூட்டாளிகளாகக் கருதப்படும் ஏ.சைமன், எம்.பிலவேந்திரன், ஜே.ஞானப்பிரகாஷ், மீசை மாதையன் போன்றோர் 1993-ல் வனத் துறை வாகனங்கள் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தி 22 காவல் துறையினரைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
இது தொடர்பாக, தடா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் வீரப்பன் கூட்டாளிகள் என்று கருதப்பட்ட நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பி, மிகுந்த காலதாமதத்துக்குப் பின்னர் அது நிராகரிக்கப்பட்டது. தண்டனையைக் குறைக்க ரிட் மனுவும், வழக்கை மறுசீராய்வு செய்யும் மனுவும் மீண்டும் தாக்கல்செய்யப்பட்டன. மறுசீராய்வு செய்ய முடியாது என்று ஜனவரி 3-ம் தேதி தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையில், எந்த நேரத்திலும் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்கப்படலாம் என்று அஞ்சப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் மரண தண்டனைக் கைதிகள் தாக்கல்செய்த ரிட் மனு மீதான இறுதித் தீர்ப்பில், “கருணை மனுவைப் பரிசீலிப்பதற்குக் குடியரசுத் தலைவர் செய்த தாமதத்தால் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுக் காத்திருந்த இரண்டு கைதிகளின் மனநிலை பாதிக்கப்பட்டதாலும், தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காரணத்துக்காகவும் மற்ற கைதிகளின் மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டிருக்கும் சில வரிகள் இவை:
“மரண தண்டனை மீதான கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துக் குறைந்தபட்சம் 14 நாட்களுக்குப் பிறகே மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்.”
“அப்சல் குருவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் இனியும் தொடரக் கூடாது. மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு குடும்பத்தினருடன் சந்திப்பதற்கான வாய்ப்பைக் கைதிகளுக்கு அளிக்க வேண்டும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவியை வழங்க வேண்டும்.”
“மரண தண்டனைக் கைதிகளையும் பிற கைதிகளையும் தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிரானது.”
இந்தியாவில் மரண தண்டனை முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் நாளுக்கு நாள் வலுக்கிறது.
இத்தகைய சூழலில், ஒரு குற்றவாளிக்கான அடிப்படை உரிமையை மீட்டெடுக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் மேற்கண்ட வரிகள் நம்முடைய அரசின் கண்களையும் நம் சமூகத்தின் கண்களையும் திறக்கக் கூடியவை.
அடுத்த கட்டமாகத் தூக்கை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஏனையோரின் மனுக்களின் நியாயத்தையும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். மரண தண்டனைக்கான முற்றுப்புள்ளியை நோக்கி உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT