Published : 28 Jan 2014 09:19 AM
Last Updated : 28 Jan 2014 09:19 AM
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பத்ரிபாலில், 13 ஆண்டுகளுக்கு முன் நடந்த போலி என்கௌன்டர் வழக்கை “குற்றச்சாட்டுகளைச் சந்தேகமின்றி நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை” என்று கூறி ஊற்றி மூடியிருக்கிறது இந்திய ராணுவம்.
ஐந்து அப்பாவிகளின் உயிர் பறிபோன சம்பவம் அது. “வெளி நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் இவர்கள்; சட்டிசிங்புராவில் சீக்கியர்களைப் கொன்றவர்கள்; காட்டில் பதுங்கியிருந்த அவர்களை உளவுத் தகவல் அடிப்படையில் சுற்றி வளைத்தோம்; அப்போது நேரிட்ட மோதலில் கொன்றோம்” என்று ராணுவம் ஆரம்பக் கதை சொன்னது. கொல்லப்பட்டோரின் உறவினர்களின் தொடர் போராட்டத்தின் தொடர்ச்சியாக, மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரணையில் இறங்கியபோது, உண்மை வெளியே வரத் தொடங்கியது.
ராணுவத்தின் ‘7 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்’ படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு பிரிகேடியர், ஒரு லெப்டினென்ட் கர்னல், இரு மேஜர்கள், ஒரு சுபேதார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த மத்தியப் புலனாய்வு அமைப்பு, “கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள்; தங்களுடைய படைப் பிரிவின் செயல்பாட்டை ராணுவத் தலைமை மெச்சிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இவர்களைத் திட்டமிட்டே படுகொலைசெய்துவிட்டு, மோதலில் அவர்கள் இறந்துவிட்டதாக ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவு நம்ப வைக்க முயன்றிருக்கிறது” என்ற உண்மையை அம்பலப்படுத்தியது. கூடவே, இந்திய ராணுவத்தில் பதக்கங்களுக்காவும் பதவி உயர்வுகளுக்காகவும் அதிகாரிகள் நடத்தும் இத்தகைய அநீதியான உத்திகளும் வெளியே வரத் தொடங்கின.
காஷ்மீரில் தேச ஒற்றுமைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் முக்கியமானவை ஆயுதப் படைகளின் அத்துமீறல்கள். உண்மையில், இத்தகைய தருணங்கள்தான் மக்கள் நலனிலும் பாதுகாப்பிலும் தனக்கு இருக்கும் அக்கறையை ராணுவமும் அரசும் வெளிக்காட்ட வேண்டியவை. அந்த வகையில், இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது ராணுவமே கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால், ராணுவத்தின் அணுகுமுறையோ ஆரம்பத்திலிருந்தே எதிர்மறையாகவே இருந்தது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது; குற்றம்சாட்டப்பட்ட ராணுவ அதிகாரிகள் மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை அறிக்கையை ஏற்க மறுத்தனர்; “ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டப்படி, இப்படித் தங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும், அப்படி எந்த அனுமதியும் பெறப்படாததால், இந்த விசாரணை அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதிட்டனர். பிறகு, ராணுவச் சட்டப்படி ராணுவ நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்போது உச்சகட்டமாக, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை என்று ராணுவ நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு சரியல்ல என்று கருதும் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா “பத்ரிபால் சம்பவத்தை மறக்கவோ, புறந்தள்ளிவிடவோ முடியாது” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். நாமும் அதையே சொல்ல விரும்புகிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற வேண்டும் என்றால், ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசு புறக்கணிக்க வேண்டும். மீண்டும் இந்த வழக்கு மறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment