Published : 20 Dec 2013 09:02 AM
Last Updated : 20 Dec 2013 09:02 AM
முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஷாருக் கான் என்று நீளும் வரிசையில் இப்போது இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே. சட்ட விதிகள் அல்லது பாதுகாப்பு நடைமுறைகள் என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படுத்தும் கண்ணியமற்ற மேலாதிக்கச் செய்கையின் உச்சக்கட்ட அவமரியாதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் தேவயானி. வீட்டு உதவியாளருக்கான விசா விண்ணப்பத்தில் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பொது இடத்தில் விலங்கு மாட்டிக் கைதுசெய்யப்பட்டு, ஆடைகளைக் களைந்தும் ஆட்சேபகரமான முறைகளில் சோதனையிடப்பட்டும், குற்றவியல் சட்டப்படி கைதுசெய்யப்பட்டிருந்தவர்களுடன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் “எங்கள் விதிகள்படி நாங்கள் செயல்பட்டோம்” என்று தரப்படும் அமெரிக்கத் தரப்பின் விளக்கம் அபத்தமானது. “எங்கள் நாட்டில் எல்லோரும் தலைகீழாக நடக்க வேண்டும்” என்றுகூட நாளை ஒரு நாடு விதி கொண்டுவரலாம். நியாயமாகிவிடுமா?
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்காவுக்கு எதிராக நாட்டின் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் ஓரணியில் நிற்பது வரவேற்க வேண்டிய விஷயம். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் சுசீல்குமார் ஷிண்டே, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோர் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவைச் சந்திக்க ஒரே நேரத்தில் மறுத்திருக்கின்றனர். இந்திய அரசு அமெரிக்காவுக்குத் தன்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருப்பதோடு, தேவையான நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது.
நாம் அமெரிக்காவுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கும் அதே வேளையில், இந்தியாவில் இது தொடர்பாக உருவாகும் விவாதங்களில் அதிகமான சத்தம் எழுப்பும் ஒரு வாதம் நம் கவனத்தைக் கோருகிறது. அது: “அமெரிக்க அரசு இரட்டை நிலையைக் கையாள்கிறது; இதே போன்ற குற்றச்சாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் அல்லது சீனாவின் தூதர்கள் உள்ளானால் அமெரிக்கா இப்படி நடத்துமா? ஓர் அமெரிக்க அதிகாரியை இப்படி நாம் நடத்தினால் எப்படி இருக்கும்; நாமும் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும்” என்பது. இந்திய அரசு அமெரிக்கத் தூதர்களுக்கு அளிக்கப்பட்ட சில விசேஷ சலுகைகளைப் பறித்து எடுத்த நடவடிக்கைகூட கிட்டத்தட்ட இந்த வாதத்தைப் போன்றதுதான்.
அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு தெரிந்த கதைதான்; ஆனால், அதற்குத் தீர்வாக நாம் கோர வேண்டியது ஐரோப்பியர்கள், சீனர்களைப் போல நமக்கும் சிறப்பு விதிவிலக்கா அல்லது இப்படிப்பட்ட அணுகுமுறையையே முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என்ற வலியுறுத்தலா? மேலும், அமெரிக்காவின் மோசமான அணுகுமுறையையே நாமும் வெளிப்படுத்த வேண்டும் என்பது முதிர்ச்சியின் வெளிப்பாடாக இருக்குமா?
இந்திய அரசு உணர்ச்சிவசப்படாமலும் உள்நாட்டு அரசியல் உள்நோக்கங்களைக் கடந்தும் செயல்பட வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT