Published : 31 Mar 2014 10:21 AM
Last Updated : 31 Mar 2014 10:21 AM
மும்பை பங்குச் சந்தையிலும் தேசியப் பங்குச் சந்தையிலும் குறிப்பிடத் தக்க அளவுக்கு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் உற்சாகம் அளிக்கும் வகையில் இல்லாதபோதும் பங்குச் சந்தையில் காணப்படும் இந்த உற்சாகம் வியப்பையே தருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியிழந்து, நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையில், அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 1,200 கோடி ரூபாயைப் பங்குச் சந்தையில் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு தொடங்கி இன்றுவரை முதலீடு செய்திருப்பதால் புள்ளிகள் உயர்ந்துள்ளன என்று சொல்லப்படுகிறது. பங்குச் சந்தைக்கும் தொழிற்சாலைகளின் உற்பத்தி, விற்பனைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதில்லை. எனவே, இந்த உயர்வுக்கு உளவியல்ரீதியான காரணங்கள் இருக்கலாம். அப்படியிருந்தால் இந்த உயர்வு, இப்படியே நீடிக்கும் என்று சொல்லிவிட முடியாது.
ஒருசில காரணிகள் மீட்சியடைந்திருந்தாலும் நாட்டின் ஒட்டு மொத்தப் பொருளாதார நிலைமை இன்னமும் தடுமாற்றமாகவே இருக்கிறது. பொருள்களுக்கான கேட்பு குறைவாகவே இருக்கிறது. நிறுவனங்களின் கடன்சுமை அதிகமாகியிருக்கிறது. உள்நாட்டவரின், நடுத்தர மக்களின் முதலீடு அறவே வீழ்ந்துவிட்டது. வங்கிகளின் வாராக்கடன் அளவு மலையெனக் குவிந்துவருகிறது. ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 5%-க்கும் குறைவாகவே இருக்கிறது. பணவீக்க விகிதம் அதிகமாகவே இருக்கிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பிற கட்சிகளைப் பெரிதும் நம்பி ஆட்சி செய்ததால் அந்நிய நேரடி முதலீடு உள்ளிட்டவற்றில் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாமல் போனது. அடுத்து மோடி பிரதமராகக்கூடும் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் தொழிலதிபர்களின் நண்பர். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடு பெருக அவருடைய அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம். ஆனால், அவர் வந்தாலும் நிலைமை மாறாது என்றே தெரிகிறது.
மத்திய அரசு இதுவரை செயல்படாமல் இருந்ததால், அடித்தளக் கட்டுமானத் துறைகளில் 25% பணிகள் இன்னும் துவங்கப்படாமலேயே இருக்கின்றன. புதிதாக ஆட்சிக்கு வருகிறவரால் புதிய வரி விதிப்புகள் இல்லாமல் நிதியைத் திரட்ட முடியாது. சலுகைகள் அளிக்காமல் தொழில்துறை வளர்ச்சியை முடுக்கிவிட முடியாது. இப்படி முரண்பட்ட நிலையில் பொருளாதாரம் இருக்கிறது.
எனவே, யார் ஆட்சிக்கு வந்தாலும் முதல் ஆண்டு மிகவும் தடுமாற நேரும். பணவீக்க விகிதம் அதிகமாக இருப்பதால், வங்கிகள் தரும் கடன் மீதான வட்டியைக் குறைக்க முடியாது. ஆனால், வட்டி வீதத்தைக் குறைத்தால்தான் தொழிலதிபர்களால் முதலீட்டை அதிகப்படுத்த முடியும். இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் கூட நாடாளுமன்றப் பொதுத்தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அங்கும் பங்குச் சந்தைகள் உற்சாகமாக இருக்கின்றன. இது செயற்கைதான் என்றாலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் காட்டுகிறது. பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் மனஉறுதியும்தான் வியாபாரத்தை உயர்த்துகிறது.
இந்த உற்சாகத்தை அடுத்து மத்திய அரசில் பதவிக்கு வரும் பிரதமரால் பராமரிக்க முடியுமா என்பதே இப்போதைய கேள்வி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT