Published : 17 Oct 2013 09:45 AM
Last Updated : 17 Oct 2013 09:45 AM

கடல் துயரங்கள்!

தொடரும் லாம்பெதுசா துயரங்களுக்குப் பின் ஐரோப்பிய நாடுகளின் பெரும் விவாதப் பொருளாகியிருக்கின்றனர் ஆப்பிரிக்க அகதிகள்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை, ஆட்சியைக் கைப்பற்ற நடக்கும் உள்நாட்டுச் சண்டைகள், இனக்குழு மோதல்கள் காரணமாக உயிரைக் காத்துக்கொள்ள தத்தமது நாடுகளைவிட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர் ஆப்பிரிக்கர்கள். சொத்துபத்துகளை விற்று இடைத்தரகர்கள் உதவியுடன் சட்ட விரோதமாக இப்படி வெளியேறும் ஆப்பிரிக்கர்களின் முதல் தேர்வு ஐரோப்பிய நாடுகள். அதிலும், ஆப்பிரிக்கக் கடலோரத்திலிருந்து சுமார் 180 மைல்கள் தொலைவில் இருக்கும் லாம்பெதுசா தீவுதான் அகதிப் படகுகளின் எளிய இலக்கு.

சோமாலியா, எரித்திரியா நாடுகளைச் சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட அகதிகள் கடந்த வாரம் வந்த படகு பளு தாங்காமல் மத்திய தரைக்கடலில், லாம்பெதுசா தீவுக்கு அருகில் மூழ்கியது; 319 பேர் இறந்தனர்; 155 பேர் மீட்கப்பட்டனர்.

லாம்பெதுசா விபத்துக்குப் பிறகு இத்தாலி, மால்டாவுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் வந்த மற்றோர் அகதிகள் படகில் இயந்திரம் பழுதாகித் தடுமாறியது. அப்போது மால்டா நாட்டு ரோந்து விமானம் ஒன்றைக் கடல் பகுதியில் கண்ட அகதிகள், தங்களை விமானி கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் படகின் மேல் தளத்தில் திரண்டனர். அவர்களில் பலர் ஒரே சமயத்தில் ஒரு பக்கமாகக் குவியத் தொடங்க அந்தப் படகு கவிழ்ந்தது; 27 பேர் இறந்தனர், 203 பேர் மீட்கப்பட்டனர். முன்னதாக இதேபோல தனித்தனிப் படகுகளில் வந்த சுமார் 500-க்கும் மேற்பட்ட அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

உண்மையில் ஆவணங்களோ ஆதாரங்களோ இல்லாத நிலையில், இந்தக் கணக்கு எல்லாமே ஊகக் கணக்கு என்றுதான் சொல்ல வேண்டும். கடலோடு கடலாக அகதிகள் கரையும் துயரம் ஒருபுறமிருக்க, அகதிகள் விஷயத்தில் கொஞ்சம் கரிசனையுடன் நடந்துகொள்ளும் ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரிகளின் கை இப்போது ஓங்குகிறது. ‘‘அகதிகளால் நம் நாட்டின் அமைதி கெடுகிறது; மக்கள்தொகை அதிகரிக்கிறது; எதிர்காலத்தில் இது சமூகப் போட்டியாக உருவெடுக்கும்’’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர் ஐரோப்பிய வலதுசாரி தேசியவாதிகள். மக்களிடமும் இது எடுபடுகிறது. சமீபத்திய பிரான்ஸ் உள்ளாட்சித் தேர்தலில் இந்தப் பிரச்சாரத்தின் தாக்கத்தைப் பார்க்க முடிந்தது. பரவும் இந்த ஜுரத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் ஆஸ்திரேலியா சமீபத்தில் தமிழகத்தில் மேற்கொண்ட சுவரொட்டிப் பிரச்சாரம்.

‘‘அகதிகள் மீதான வெறுப்பு அநீதியானது; அதேசமயம், அவர்கள் உள்நாட்டின் பிரச்சினையாகிவிடாமல் பரிவுகாட்ட வேண்டும். அரசியல் தலைமைகள் இதுபற்றிச் சிந்திப்பது உடனடித் தேவை’’ என்கின்றனர் ஐரோப்பிய அறிவுஜீவிகள். இந்தியாவுக்கும் இது பொருந்தும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x